பாக்., உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட தம்பதி டில்லியில் அதிரடி கைது

8

புதுடில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பிற்கு, நம் நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதுடன், இங்கிருந்து, எட்டு 'சிம் கார்டு'களை அனுப்பிய சாஹில், 25, - சமீரா, 21, என்ற இளம் தம்பதியை டில்லி போலீசார் கைது செய்தனர்.

இருவரும் ராணுவ பகுதிகளை படம்பிடித்து அனுப்பியதுடன் உளவு வேலையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல்





நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கும், அந்நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் ரகசிய ஏஜென்டாக செயல்படும் நபர்களுக்கு, இளம் தம்பதி உதவுவதாக டில்லி போலீசாருக்கு உளவுத் துறை சமீபத்தில் தகவல் அளித்தது.

இது குறித்து விசாரிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் குழு ஒன்று செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

டில்லி சராய் காலே கான் பகுதியைச் சேர்ந்த சாஹில் என்பவரை சமீபத்தில் சிறப்பு படையினர் கைது செய்தனர்.

அவரது மொபைல் போனை சோதனையிட்டதில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் அதிகாரிகளுடன் அவர் பேசியிருந்தது உறுதியானது.

இதையடுத்து, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், 'கால் சென்டர்' ஒன்றில் பணியாற்றிய அவரது மனைவி சமீரா கைது செய்யப்பட்டார்.

இருவரிடம் இருந்தும் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்திப்பு





இது குறித்து போலீஸ் சிறப்பு படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சாஹில் மற்றும் அவர் மனைவி சமீரா ஆகியோர், கடந்த 2024 முதல் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

சமூக வலைதளம் வாயிலாக சமீராவுடன், சாஹிலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பாக்., ஏஜென்ட் ஒருவரை சமீரா அறிமுகம் செய்துள்ளார். காதலித்து திருமணம் செய்த இருவரும், பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., அமைப்பு உயரதிகாரிகளை சந்தித்துள்ளனர்.

இருவரும், இந்தியாவில் இருந்தபடி உளவு பார்த்து தகவல்களை அனுப்ப, ஐ.எஸ்.ஐ., பணித்தது. இந்திய ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளை நோட்டமிடுவதற்கும், உளவு வேலைக்கு புதிய ஆட்களை சேர்ப்பதற்கும் சாஹில் பணிக்கப்பட்டிருந்தார்.

கூடுதலாக, ராணுவ தீர்ப்பாயங்களில், ராணுவ சட்டங்களை மீறி தண்டனைக்குள்ளாகும் வீரர்களை பற்றி தகவல்களை திரட்டும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பல்வேறு தகவல்களை பாக்., உளவு அமைப்புகளுக்கு வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'சிம் கார்டு'





கடந்த இரு ஆண்டுகளில், எட்டு இந்திய சிம் கார்டுகளை வாங்கி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் வழியாக பாக்.,கிற்கு இவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். சிம் கார்டுகளை பாக்., உளவு அமைப்புக்கு வழங்கும் பணி சமீராவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்காக, பாகிஸ்தானின் உளவு ஏஜென்டுகளிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாயை இந்த தம்பதி பெற்றுள்ளது. இங்கிருந்து பெறப்பட்ட இந்திய எண்கள் வாயிலாக, பாக்.,கில் 'வாட்ஸாப்' குழுக்கள் தொடங்கப்பட்டன.

இந்திய வாட்ஸாப் எண்கள் என்பதால், ராணுவம் மற்றும் முக்கிய அமைப்புகளின் வாட்ஸாப் குழுக்களில் நுழைந்து ரகசிய தகவல்களை சேகரிக்க பாக்., ஏஜென்டுகள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement