இரட்டை பொறுப்பு எனக்கு பிடிக்கும்!



மனைவி விவாகரத்து பெற்று சென்ற நிலையில், மகளை தனியாளாக வளர்த்து வரும், கோவையைச் சேர்ந்த அபிலாஷ்:

கடந்த 2009ல் எனக்கு திருமணம் ஆனது. ஆரம்ப நாட்களில் சந்தோஷத்திற்கு குறைவே இல்லை. ஒரு கட்டத்தில், வீட்டில் உள்ள பெரியவர்களால், எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்தன.

என் மனைவி மேல்படிப்பிற்காக சென்னை கிளம்பினார். பிரச்னைகளை பெரிதாக்க வேண்டாம் என்று, நானும் என் வேலையை விட்டுவிட்டு, அவருடன் சென்னை சென்றேன்; அந்த நேரம் அவர் கருவுற்றார்.

மனைவியையும், அவரின் பெற்றோரையும் நானே பார்த்துக் கொண்டேன். ஆனால், அதுவே எனக்கு பிரச்னையாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. மனைவி, என்னை தவிர்க்க ஆரம்பித்தார்; எப்போதும், தன் பெற்றோருடனே இருந்தார். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த நொடி முதல், மகளே என் உலகமாக மாறினாள்.

எனக்கும், மனைவிக்கும் இடைவெளி பெரிதாக ஆரம்பித்தபோது மகளுக்கு, 3 வயதானது. மனைவி, 'துபாய்க்கு வேலைக்கு செல்கிறேன்' என்றார். 'இந்தியாவிலேயே வேலை தேடிக் கொள்ளலாம்' என நான் கூறியும், கேட்காமல் துபாய் சென்றார். நான் மகளுடன் கோவைக்கு வந்து விட்டேன்.

என் மகளின் 10வது வயதில், மனைவி விவாகரத்து கேட்டார். குழந்தை என்னிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் மகளும், 'அப்பாவிடமே இருக்கிறேன்...' என்று கூறினாள். 2023ல் எங்களுக்கு விவாகரத்து கிடைத்தது.

அம்மா மட்டுமே கொடுக்கக்கூடிய அன்பையும், அரவணைப்பையும் அப்பாவால் கொடுக்க முடியாது. ஆனால், என் மகள் பிறந்தது முதலே, அம்மாவாகவும் வாழ்ந்து பழகி விட்டேன். குழந்தையை வளர்ப்பது என்றுமே கஷ்டமாக தெரியவில்லை. என் சிறு வயது முதலே உடன் இருக்கும் தோழியர், நண்பர்கள் என பலரும் என் மகளை அருமையாக பார்த்துக் கொள்கின்றனர்.

இப்போது அவளுக்கு, 13 வயதாகிறது. யாராவது அம்மா குறித்து கேட்டால், 'அவங்க வெளிநாட்டில் இருக்காங்க. அம்மாவும், அப்பாவும் பிரிந்து விட்டனர். நான் அப்பாவுடன் இருக்கிறேன்' என்று கூறும் பக்குவம் மகளுக்கு உள்ளது.

என் மகளின் பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியம். எவரை நம்பியும் மகளை வெளியே அனுப்ப மாட்டேன். சுய பாதுகாப்பு குறித்தும் மகளுக்கு சொல்லி தருகிறேன்.

'இவ்வளவு பாசமாக வளர்க்கிறியே... நாளைக்கு திருமணம் செய்து கொடுக்கணுமே...' என்று, பலரும் கேட்கின்றனர். பிரிவு என்ற கற்பனையே வலிக்கிறது; ஆனாலும், அதுதான் எதார்த்தம்; ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்.

சுமக்க சிரமமாக இருந்தாலும், சில வலிகள் பிடிக்கும். அப்படித்தான் அம்மாவாக, அப்பாவாக இரட்டை பொறுப்பு சுமப்பதும் எனக்கு பிடித்திருக்கிறது.

***

Advertisement