பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு நீட்டிக்கப்படுமா?

திருப்பூர்: பருத்தி தட்டுப்பாடு மற்றும் தொடர் நுால் விலை உயர்வால் ஜவுளித் துறை கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், பருத்தி இறக்குமதி வரி விலக்கை மேலும்ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர் நுால் விலை உயர்வு குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் திருக்குமரன் வரவேற்றார்.

இணைச்செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், நாட்டில் சுமார் 10 லட்சம் பேல் பருத்தி தட்டுப்பாடு இருப்பதாகவும், பருத்தி தட்டுப்பாடு மற்றும் நுால்விலை உயர்வு ஜவுளி உற்பத்தித் துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மானியங்கள் அதிகரிக்குமா? சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:

பருத்தி மீதான இறக்குமதி வரி வரும் அக்டோபர் வரை நீக்கப்பட்டுள்ளது. தரமான பருத்தி தட்டுப்பாடு, நுால் ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டில் நுால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

பழைய நுாற்பாலைகளை நவீனப்படுத்தவும், ஜவுளித் துறைக்கான மானியங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பருத்தி கழகம் தினசரிக்கு பதிலாக, மாதம் ஒருமுறை பருத்தி விலையை நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்க இணைச்செயலாளர் ஆனந்த் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் துணைக்குழு தலைவர்கள் பங்கேற்றனர்.

மாதம் ஒருமுறை மட்டும்: நுால் விலை நிர்ணயம் அவசியம்: கூட்டத்தில், நுாற்பாலைகள் மாதம் ஒருமுறை மட்டுமே நுால் விலையை நிர்ணயிக்கவேண்டும்; எந்த சூழலிலும் தடையின்றி நுால் வினியோகிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பருத்தி இறக்குமதி வரி விலக்கை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது, நுாற்பாலைகளின் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப பருத்தி ஒதுக்கீடு செய்ய சி.சி.ஐ.,யிடம் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

நுால் விலை குறித்த முன்னறிவிப்பு அறிக்கையை சங்க உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அனுப்பவும், பருத்திமற்றும் நுால் விலையில் ஏற்படும் அசாதாரண உயர்வுகளை ஆராய்ந்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளை பரிந்துரைக்க தொழில்முறை ஆலோசகரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement