2 மாதங்களில் 731 சாலை விபத்து 1,204 பேருக்கு அவசர சிகிச்சை

கோவை: மாவட்டத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 731 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 203 பேர் கடுமையாகவும், 528 பேர் லேசாகவும் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 372 முறை 108 ஆம்புலன்ஸ் சேவையும், 270 முறை தனியார் ஆம்புலன்ஸ் சேவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுகாதாரத்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் சாலை விபத்துகள், விபத்துகளில் ஏற்பட்ட காயங்களின் தன்மை, அவசர சிகிச்சை மற்றும் விபத்து மரணங்கள் குறித்த தணிக்கை அறிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6,203 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1,557 பேர் கடுமையாகவும், 4,646 பேர் லேசாகவும் காயமடைந்துள்ளனர். 636 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும் ‘கோல்டன் ஹவர்’ அவசரகால சிகிச்சைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

ஜூலையில் மட்டும் 1,204 நோயாளிகள் ‘கோல்டன் ஹவர்’ நேரத்துக்குள் மருத்துவமனையை அடைந்து உடனடி சிகிச்சை பெற்றுள்ளனர்.

‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ், அரசு அனுமதித்த மருத்துவமனைகளில் 155 நிதி கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு ரூ.18,60,218 தொகை  வழங்கப்பட்டுள்ளன.

துரித சிகிச்சை

திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களும் கோவை மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் சேவையை மேலும் விரைவுபடுத்தவும், விபத்தில் காயமடைபவர்களுக்கு உடனடி மற்றும் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Advertisement