23,000 ரூபாய்க்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலம்; இப்படியும் நடக்கிறது நூதன மோசடி

37



-நமது நிருபர்-




வருங்கால மனைவிக்கு, வித்தியாசமான பரிசு தருவதற்காக, இணையதளத்தில் தேடி, நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய இன்ஜினியர் சரவணன், 32 , என்பவர், 23,000 ரூபாய் பணம் கட்டி, அதற்கான ஆவணங்களையும் பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன், 32. இன்ஜினியரிங் பட்டதாரி. இவருக்கும், மதுரையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தன் வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமண பரிசு வழங்க சரவணன் திட்டமிட்டார்.

இதற்காக இணையத்தில் தேடியபோது, நிலவில் இடம் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்ததை பார்த்துள்ளார். அதை உண்மை என நம்பிய சரவணன், அந்த இணையதள முகவரியை தொடர்பு கொண்டு, தன் வருங்கால மனைவி பெயரில், நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக முன்பதிவு செய்தார்.

இதற்காக அவரிடம், 23,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிலவில் சந்திராயன் விண்கலம் தரையிறங்கிய பகுதியான, 'ஸ்டேடியா சிவ சக்தி' என்ற இடத்தில், ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, சரவணனுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அத்துடன், அவரது வருங்கால மனைவி, செப்., 17ல் நிலவுக்கு புறப்படும் வகையில் பயண டிக்கெட் வழங்கியதாக தகவல் பரவியது. சரவணன் கூறுகையில், ''வருங்கால மனைவிக்காக நிலவில் இடம் வாங்கியுள்ளேன். நிச்சயம் அங்கு செல்வோம்,'' என்றார்.


@block_G@

இது முற்றிலும் மோசடி

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: சர்வதேச விண்வெளி சட்ட விதிகள்படி, நிலவில் எந்த ஒரு தனி நபரோ அல்லது தனியார் நிறுவனமோ நிலத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ துளியும் அனுமதியில்லை.

கடந்த, 1967ல் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தப்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளி பொருட்கள் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கோ, பயன்பாட்டிற்கோ அல்லது தனிநபர் உரிமைக்கோ உட்படாது.

விண்வெளி என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுவான சொத்து. நிலவில் நிலம் வாங்கி தருவதாக கூறி சரவணனிடம், 23,000 ரூபாய் வசூல் செய்துள்ளது முற்றிலும் ஏமாற்று வேலை. இவ்வாறு அவர்கள் கூறினர்.block_G

Advertisement