கரூர் மேயர் வார்டில் குப்பை குவியல் அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை

கரூர்:கரூர் மேயர் கவிதாவின் வார்டில், பொதுவெளியில் குப்பை குவிந்துள்ளதால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சியின், 48 வார்டுகளில், 81,118 குடியிருப்பு, 12,521 வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களிலிருந்து தினமும், 71 டன்னுக்கு மேல் குப்பை சேகராமாகிறது. இவை, துாய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, கரூர் அரசு காலனி அருகே, வாங்கல் சாலையில், 24.50 ஏக்கரில் உள்ள குப்பை கிடங்கில் குவித்து வைக்கப் படுகிறது.
தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை, மட்கும், மட்காத கழிவு, சுகாதார கழிவு, அபாயகர கழிவு என, குப்பைகளை, நான்கு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். இவ்வாறு பிரித்து தான், துாய்மை பணியாளர் களிடம் ஒப்படை வேண்டும். பிரிக்கப்படாத கழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த விதிகளின்படி, திடக்
கழிவுகளை பிரிக்காமல் வழங்கினாலோ, எரித்தாலோ அல்லது தெரு ஓரங்களில் எரித்தாலோ, 1,000 முதல், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதுவரை, 65,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி கமிஷனர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பல்வேறு சாலையோரங்களில் குப்பை கொட்டுவது மட்டுமல்லாது, தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது. அதில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதாவின், கவுன்சிலராக உள்ள, 4வது வார்டு வாங்க பாளையம் அருகில், தீரன் சின்னமலை நகரில் காலி மனைகளில் குப்பை டன் கணக்கில் கிடக்கிறது. அங்கு குடியிருப்பவர்கள், தினமும் வீட்டுக்கு வரும் துாய்மை பணியாளர்களிடம் குப்பை முறையாக வழங்குவது கிடையாது.
அதற்கு பதிலாக, காலி மனைகளில் குப்பை வீசி வருகின்றனர். பின், அதை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக மாறி வருகிறது.
வீடுகளில் இருப்பவர்கள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேயர் கவிதா வார்டில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி, பொதுவெளியில் குப்பையை வீசி வருகின்றனர். இங்கு, மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement