உஸ்பெகிஸ்தானில் இந்திய தேசியக்கொடி நிறத்தில் மிளிர்ந்த பிரமாண்ட கட்டடம்; பிரதமர் மோடியை வரவேற்க ஏற்பாடு

4


-நமது நிருபர்-

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் உள்ள ஹில்டன் ஹோட்டல் கட்டடம் இந்திய தேசியக் கொடியின் நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது. பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் வருகையை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்திய ஆசிய நாடுகளுடனான துாதரக உறவுகளை வலுப்படுத்தவும், அப்பிராந்தியத்துடனான தொடர்பை மேலும் நெருக்கமாக்கவும் பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். தாஷ்கன்ட் விமான நிலையத்துக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேரில் சென்று வரவேற்றார்.

இது உஸ்பெகிஸ்தானுக்கான பிரதமர் மோடியின் நான்காவது பயணம். புகழ்பெற்ற ஹில்டன் ஹோட்டல் உட்பட தலைநகர் முழுவதும் உள்ள முக்கிய கட்டடங்களில் இந்திய தேசியக் கொடியின் நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது. பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி உற்சாகமாக வரவேற்றனர்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''தாஷ்கண்டில் நடைபெற்ற சமூக வரவேற்பு, இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலாசாரகளை பிரதிபலிக்கும் ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அமைந்தது; லால் பகதூர் சாஸ்திரி இந்திய கலாசார மையத்தின் மாணவர்களின் கதக் நிகழ்ச்சி உள்பட ஏராளமான நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருந்தது'' என குறிப்பிட்டுள்ளார்.

தாஷ்கன்டில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும், 'ஓரியன்டல் ஸ்டீஸ்' பல்கலையில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி மையத்தையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் தொடர்பு, ராணுவம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிபர் மிர்சியோயேவுடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement