பஸ் ஸ்டாண்டில் அலங்கார வளைவு பணி இழுபறி :ஆறு மாதமாக அவதிப்படும் பயணிகள்

மானாமதுரை:மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் பாதையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு கட்டுமான பணி நிறைவு பெற்ற நிலையில் அதனை திறக்க வேண்டுமென்று டிரைவர்கள், பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பாதையில் நகராட்சி சார்பில் அலங்கார வளைவு அமைக்கும் பணி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. பஸ்கள் உள்ளே செல்லும் பாதையில் முதலில் கட்டுமான பணி துவங்கப்பட்ட போது பஸ்கள் அனைத்தும் மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றதால் அவதிப்பட்டு வந்தனர்.

பஸ்கள் உள்ளே செல்லும் பாதையில் கட்டுமான பணி நிறைவு பெற்ற நிலையில் பஸ்கள் உள்ளே சென்று வந்தது. பஸ்கள் வெளியே செல்லும் பாதையில் 3 மாதங்களுக்கு முன்பு அலங்கார வளைவு கட்டும் பணி மீண்டும் துவங்கப்பட்டது. இதையடுத்து பஸ்கள் உள்ளே செல்லும் பாதை வழியாக சென்று அதே வழியாக பஸ்கள் வெளியே வந்ததால் பஸ் ஸ்டாண்டிற்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான பஸ்கள் நான்கு வழிச்சாலையிலேயே சென்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஸ்கள் வெளியே செல்லும் பாதையில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் அப்பாதையை தற்போது வரை திறக்காமல் இருப்பதால் ஒரு வழி பாதையிலேயே பஸ்கள் உள்ளே சென்று திரும்புவதால் மிகுந்த அவதிப்பட்டு வருவதாக டிரைவர்கள், பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் உடனடியாக பஸ்கள் வெளியே செல்லும் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

Advertisement