ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்

வாவ்ரே: உலக கோப்பை ஹாக்கியில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 1-0 என, ஸ்பெயினை வென்றது.

நெதர்லாந்து, பெல்ஜியத்தில், உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் நடந்தது. நேற்று, பெல்ஜியத்தின் வாவ்ரே நகரில் நடந்த பைனலில், ஸ்பெயின், 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஜெர்மனி அணிக்கு 44வது நிமிடத்தில் மிச்செல் ஸ்ட்ருதோப் ஒரு 'பீல்டு' கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஸ்பெயின் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு உலக சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது. தவிர 4வது முறையாக (2022, 2006, 2023, 2026) கோப்பை வென்றது. அதிக முறை உலக கோப்பை கைப்பற்றிய அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை பாகிஸ்தானுடன் (1971, 1978, 1982, 1994) பகிர்ந்து கொண்டது ஜெர்மனி. ஸ்பெயின் அணி 3வது முறையாக (1971, 1998, 2026) 2வது இடம் பிடித்தது.

அர்ஜென்டினா 'வெண்கலம்'


மூன்றாவது இடத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வியடைந்த நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2014, 2026) வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. அர்ஜென்டினா சார்பில் தோமஸ் டோமெனே (41வது நிமிடம்), கேப்டன் மதியாஸ் ரே (59வது) தலா ஒரு கோல் அடித்தனர். நெதர்லாந்து அணிக்கு புளோரிஸ் மிட்டென்டார்ப் (49வது) ஆறுதல் தந்தார்.

Advertisement