270 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து; மீட்பு பணி தீவிரம்

நிகோசியா: சுமார் 270 பேருடன் சென்ற கப்பல் மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்தவர்களை மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு சைப்ரஸில் இருந்து துருக்கி நோக்கிச் சென்ற கப்பலில், 259 பயணிகள், 8 மாலுமிகள் உள்பட 270 பேருடன் சென்ற மிகப்பெரிய கப்பல், சைப்ரஸில் இருந்து கிளம்பிய சில கிலோ மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், கப்பலில் பயணித்தவர்கள் பெரும்பாலும் 'லைப் ஜாக்கெட்'டை அணிந்திருந்ததால், தண்ணீரில் தத்தளித்தனர். சிலர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், வடக்கு சைப்ரஸ் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் கடற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதுவரையில் 172 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறிய வடக்கு சைப்ரஸ் நாட்டு பிரதமர் உனல் உஸ்தெல், எஞ்சியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரையில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement