தமிழகத்திற்கான பற்றாக்குறை காவிரி நீரை கர்நாடகா உடனே திறக்க உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு
- சிறப்பு நிருபர் -
காவிரி நீர் விவகாரத்தில், விகிதாச்சார அடிப்படையில், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான, 17.604 டி.எம்.சி.,-யை, கர்நாடக அரசு உடனடியாக திறந்து விடுவதை உறுதி செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் கூடுதல் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் விவகாரத்தில், தண்ணீர் திறப்பை உறுதிப்படுத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் திறக்க முடியாததற்கான காரணங்களை குறிப்பிட்டு, கர்நாடக அரசும் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா இடம் பெற்ற உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தற்போதைக்கு காவிரி விவகாரத்தில் எந்த இறுதியான உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீர் இருப்பு குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
அதன்படி, காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கை விபரம்:
விகிதாச்சார அடிப்படையில், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான, 17.604 டி.எம்.சி.,-யை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விடுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த, 24ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், பற்றாக்குறையை ஈடுசெய்ய வினாடிக்கு, 22,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, தமிழகம் கோரியது. ஆணையமோ, 9,000 கன அடி நீர் மட்டுமே திறக்க உத்தரவிட்டது. கர்நாடகா அணைகளில், 72.961 டி.எம்.சி., நீர் இருந்தும், அம்மாநில அரசு பாசன கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம், 20 டி.எம்.சி., தண்ணீரை மடைமாற்றம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் முதல் இதுவரை, 80.451 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 25.598 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. வறட்சி கால விகிதாச்சார கணக்கீட்டின் படி பார்த்தாலும், 43.202 டி.எம்.சி., கிடைத்திருக்க வேண்டும். ஆணையம் உத்தரவிட்ட 9,000 கன அடி நீரை கூட கர்நாடக அரசு திறந்து விடாததால், காவிரி டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல், விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா முறையாக அமல்படுத்துவதை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திற்கான பற்றாக்குறை நீரை உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்