குப்பை மேலாண்மைக்கு புது திட்டம்

திருப்பூர், ஆக. 31–

திருப்பூர் மாநகராட்சியின் நீண்ட நாள் பிரச்னையான குப்பை மேலாண்மைக்கு தீர்வு காணும் வகையில், ‘ட்ரீம்-–20’ பசுமை அமைப்பு, மாநகராட்சியுடன் இணைந்து புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.



மாநகரில் குப்பைகள் தேங்குவதையும், மக்கும், மக்காத குப்பைகள் கலப்பதையும் தடுக்க, குப்பை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மறுசுழற்சி செய்யக்கூடியது, மறுசுழற்சி செய்ய முடியாதது என 3 வகையாக தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீடு வீடாகவும், தெருமுனைகளிலும் பிரசாரம் செய்வதுடன், பள்ளி, கல்லுாரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.



வார்டு 32, தியாகி குமரன் காலனியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த ஓராண்டாக இத்திட்டம் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017 முதல் ‘நெகிழி இல்லா திருப்பூர்’ திட்டம் மூலம் 65 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் பிளாஸ்டிக் இல்லாமல் நடத்தப்பட்டதுடன், 250-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இத்திட்டம் தொடர்பாக எம்.எல்.ஏ., பாலமுருகன், மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோரை சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

–––

‘நெகிழி இல்லா திருப்பூர்’ மற்றும் குப்பை தரம் பிரித்தல் தொடர்பான ‘ட்ரீம்–20’ அமைப்பினரின் விழிப்புணர்வு அட்டையுடன் சிறுவன்.

Advertisement