பழைய பஸ் நிலைய வழி பாதையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் உள்ள பழைய பஸ் நிலைய வழிப்பாதைகளில், வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு உள்ளே செல்லும் வழி, தியாகதுருகம் சாலை பகுதியிலும், வெளியேறும் வழி கச்சேரி சாலையிலும் உள்ளது.

அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பழைய பஸ் நிலையத்தின் அருகிலேயே காய்கறி மார்க்கெட், அரசு பள்ளி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், கோர்ட், கருவூலம், பதிவாளர் அலுவலகம் ஆகியவைகள் இயங்கி வருகின்றன.

அத்துடன் இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான ஓட்டல்கள், துணி கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் உள்ளன.

இதனால் இவ்விரு வழிப்பாதைகளுக்கு முன்பாகவும், ஆட்டோக்கள், பைக்குகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.

அத்துடன் பஸ் நிலைய வழிகளை அடைத்தபடி தற்காலிக பூ, பழம், காய்கறி தற்காலிக கடைக்காரர்கள் அணிவகுப்பும் உள்ளது.

இதனால் பஸ் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் தவிக்கின்றன.

எனவே சாலையார ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய பஸ் நிலையத்திற்குள் வாகனங்கள் எளிதில் செல்ல  வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement