வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முகாமிட்ட யானை

கூடலுார்: கூடலுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானையால் குடியிருப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் மார்த்தோமா நகர் அருகே, அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். இதன் அருகே உள்ள, விளையாட்டு மைதானத்தை ஒட்டிய பகுதியில் கடந்த சில நாட்களாக மக்னா யானை முகாமிட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு யானை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் நுழைந்தது, அங்கிருந்தவர்கள் அலறி அடித்து வீட்டுக்குள் சென்றனர். தொடர்ந்து, சப்தமிட்டு யானையை விரட்டினர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் கூறுகையில், ‘குடியிருப்பை ஒட்டி, கடந்த சில நாட்களாக, முகாமிட்டுள்ள காட்டு யானை, இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவையால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காட்டு யானை இப்பகுதிக்கு வருவதை தடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement