எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து

சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா. கடந்த 2018ல், தன் சமூக வலைதளத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழியை அவமதிக்கும் கருத்துடன் பதிவு வெளியிட்டிருந்தார்.

அத்துடன், 'திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல, இங்கும் நாளை பெரியார் சிலையை அகற்றுவோம்' என்றும், மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விரு கருத்துகள் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் எம்.பி., அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஈரோடு, கருங்கல்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில், எச்.ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஈரோட்டில் இருந்து மாற்றப்பட்ட இந்த வழக்குகளை, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

இந்த இரண்டு வழக்குகளில் எச்.ராஜாவுக்கு, தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனை, 5000 ரூபாய் அபராதம் விதித்து, 2024ம் ஆண்டு டிச., 2ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, எச்.ராஜா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ''எச்.ராஜாவின் பதிவுகளால், சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டன என்பதற்கு, எந்த ஆதாரங்களும் இல்லை,'' எனக் கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தார்.

மோடிக்கு யாரும் போட்டி இல்லை' இந்நிலையில் காரைக்குடியில் எச்.ராஜா அளித்த பேட்டி: என் மீது தொடரப்பட்ட இரு வழக்குகளில் நீதி கிடைத்துள்ளது. முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக கூறுவது தேவையற்றது. பிரதமர் மோடிக்கு யாரும் போட்டி இல்லை. பிரதமர் மோடி கைகாட்டுபவர் தான் அடுத்து பிரதமராக வர முடியும். த.வெ.க., அரசு மதசார்பற்றது என சபாநாயகர் பிரபாகர் நினைத்தால் சட்டசபையில் முதலில் திருக்குறள் சொல்ல வேண்டும். சட்டசபை கிறிஸ்தவ திருச்சபை போன்று நடப்பதாக பத்திரிகையாளர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. எனக்கு கேள்வி எழவில்லை. அது தவறு என சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும். த.வெ.க., ஆட்சி 100 நாள் சினிமா போன்றது. 6 மாதங்களுக்கு பின் ஆட்சி குறித்து கூறுவேன் என்றார்.

'

Advertisement