கழிவுகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க நகராட்சி விழிப்புணர்வு
உடுமலை: உடுமலை நகராட்சி பகுதிகளில், கழிவுகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு உத்தரவு அடிப்படையில், உடுமலை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் திட்டம் – 2026-ன் விதியின் கீழ், கழிவுகளை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு மற்றும் சிறப்பு கழிவுகள் என நான்கு வகைகளாக கழிகளை பிரித்து வழங்கவும், தனித்தனி நிறங்களில் உள்ள பிளாஸ்டிக் கலன்களில் வைத்திருக்க வேண்டும்.
வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு, கழிவுகள் சேகரிக்க வரும், நகராட்சி தூய்மை பணியாளர்களிடம், கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தர வேண்டும், என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 8வது வார்டு, அண்ணா குடியிருப்பு பகுதியிலுள்ள குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இப்பகுதியிலுள்ள, அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு, பரப்புரையாளர்கள் வாயிலாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நேற்று, அண்ணா குடியிருப்பில், நான்கு வகைகளாக கழிவுகள் தரம் பிரிப்பது தொடர்பான, கோலம் போடப்பட்டு, பொதுமக்களுக்கு பள்ளி செல்லும், மாணவ, மாணவியர்க்கு, விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.