மாநில அளவில் குத்துச்சண்டை போட்டி: 3,000 வீரர், வீராங்கனையர் பங்கேற்பு

நாமக்கல்:மாநில குத்துச்சண்டை போட்டியில், 38 மாவட்டங்களை சேர்ந்த, 3,000 வீரர், வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், வேட்டாம்பாடி பி.ஜி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை போட்டி, நேற்று துவங்கியது. எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து, போட்டியை துவக்கி வைத்தார். நேற்று துவங்கிய குத்துச்சண்டை போட்டி, இரண்டு நாட்களுக்கு மாணவியருக்கும், நாளை, நாளை மறுநாள் மாணவர்களுக்கும் என, நான்கு நாட்கள் நடக்கிறது.
அதில், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, சென்னை, கன்னியாகுமாரி உள்பட, 38 மாவட்டங்களை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர். போட்டிகள் அனைத்தும், 'நாக்அவுட்' முறையில் நடக்கிறது. மேலும், 14, 17, 19 வயதிற்குட்பட்டோருக்கு, எடை பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாநில அளவில் முதல் பரிசு தங்கப்பதக்கம், இரண்டாம் பரிசு, வெள்ளி பதக்கம், மூன்றாம் பரிசு வெண்கலப்பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் புருசோத்தமன், பச்சமுத்து, சாந்தி, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement