மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை

5

புதுடில்லி: டில்லி போராட்ட விவகாரத்தில் மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம், சிறப்பு பிரிவு போலீசார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் கடந்த மாதம், டில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட விளக்கம் தொடர்பாக, முன்னாள் மத்திய அரசு அதிகாரியான ஆஷிஷ் ஜோஷி என்பவர் விடுத்த எக்ஸ் தளப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓய்வுபெற்ற இந்திய தபால் மற்றும தொலைத்தொடர்பு, கணக்கு மற்றும் நிதி சேவை அதிகாரியான இவர், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் ஓய்வுபெற்றார்.

அவரது கருத்து சட்டத்திற்கு எதிரானது என்பதால், அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில், நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஷிஷ் ஜோடியை டில்லி போலீசாரின் சிறப்பு பிரிவினர் கைது செய்தனர்.

நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் வைத்து, அவரிடம் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு, மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் டில்லியில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement