வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு

1

புதுடில்லி: பாஜ ராஜ்யசபா எம்பி ராகவ் சதா பெயர் பஞ்சாப் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு அரசியல் பழிவாங்குவதற்காக தேர்தலை பயன்படுத்துகிறது என பாஜ எம்பி ராகவ் சதா குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு அப்பால், கட்சியை வளர்க்க துடித்த ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு வலதுகரமாக இருந்தவர் ராகவ் சத்தா, 37. சில ஆண்டுகளாக, இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராகவ் சதா கடந்த ஏப்ரல் மாதம் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பாஜவில் ஐக்கியம் ஆனார்.

தற்போது பஞ்சாபில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில் ராகவ் சதாவின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுள்ளது சர்ச்சையை கிளப்பியது. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என அவரின் பெயர் நீக்கத்திற்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பாஜ எம்பி ராகவ் சதா கூறியதாவது: பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு, இப்போது தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை எஸ்ஐஆர் பணியிலும் புகுத்தியுள்ளது.

நான் பஞ்சாபிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி; எனது வாக்காளர் அடையாள அட்டை மொஹாலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வெளியான வாக்காளர் பட்டியலில் எனது பெயர் "இடம் மாறியவர்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக, இவை இறுதி வாக்காளர் பட்டியல் அல்ல, வரைவுப் பட்டியல் மட்டுமே.

தற்போது நடைபெற்று வரும் 'கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள்' செயல்முறையின் போது பெயர்களில் உள்ள பிழைகள் திருத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2026 அக்டோபரில் வெளியிடப்படும். இதற்கான தீர்வு காணும் நடைமுறைகளை நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன். இது வெறும் அலுவலக ரீதியான தவறு போலத் தெரியவில்லை. இது வெளிப்படையான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

என்னை 'இடம் மாறியவர்' என்று குறிப்பிட்டது யார்? ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் அரசு அதிகாரி ஒருவர். அந்த வகைப்பாட்டை சரிபார்த்தது யார்? மீண்டும், அதே ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் அரசு அதிகாரி ஒருவர். களப்பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அதிகாரி முதல் பஞ்சாப் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி வரை, இந்தச் செயல்முறையின் ஒவ்வொரு நிலையிலும் பஞ்சாப் அரசு அதிகாரிகளே பணியில் உள்ளனர்.

ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நான் வெளியேறியது முதல், அக்கட்சியின் தலைமை கடும் கோபத்தில் உள்ளது. தற்போது எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கலாம்; ஆனால், பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்கட்சியின் தனிப்பட்ட சொத்து அல்ல. இவ்வாறு ராகவ் சதா கூறியுள்ளார்.

Advertisement