'செய்தித்தாள் படித்தால் போட்டி தேர்வில் சாதிக்கலாம்': கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேச்சு

விழுப்புரம்: அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள், செய்தித்தாள்களை படிக்க வேண்டும் என கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் பேசினார்.

விழுப்புரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், புதுச்சேரி தினமலர் நாளிதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

கடந்த ஆண்டும் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பள்ளி மாணவர்களிடையே, தினமலர் நாளிதழ் சார்பில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வினாடி, வினா போட்டி நடக்கிறது.

விழுப்புரத்தில் முதற்கட்டமாக நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரியில் நடக்கும் இறுதி தேர்வில் பங்கேற்கும் போட்டியிலும், இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தற்போது பொதுவாக நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் பொழுதுபோக்கு இருந்தது இல்லை.

காலையில் செய்தித்தாள் மட்டுமே இருந்தது. அதை வைத்து தான் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டோம்.

அதன் பிறகு, ரேடியா மற்றும் டி.வி., வந்தது. கடந்த காலங்களில் ஒரு நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் செய்தி வரும். முக்கியமான செய்தி இருந்தால் இடையில் கூறுவர். தற்போது 'பிரேக்'கிங் செய்தியாக மாறிவிட்டது.

நிறைய முன்னேற்றங்கள் வந்துவிட்டன. பள்ளிகளில் அதிகளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது.

அதில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

வெளி உலகத்தை பார்த்தால் மட்டுமே நீங்கள் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் பள்ளி படிப்பு முடித்ததில், 4 அல்லது 5 சதவீதம் பேர் தான் டிகிரி வாங்கினர். தற்போது அதிகளவில் டிகிரி வாங்குகின்றனர்.

சாதனை படைத்த தலைவர்கள் அனைவரும் புத்தகம், நாளிதழ் படித்துள்ளனர். நிறைய படிக்க வேண்டும். எங்கேயோ ஒரு நாட்டில் நடக்கும் போரால் நம் நாட்டில் விலைவாசி உயர்கிறது. அதனை தெரிந்து கொள்ள நாளிதழ் படிக்க வேண்டும்.

உங்களை சுற்றியுள்ள விஷயங்களை ஆர்வமாக கற்றுக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு புத்தகம் படிப்பதை போல, நாளிதழையும் படிக்க வேண்டும்.

அதன் மூலம் பொது அறிவு கிடைக்கும். தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெற கூட செய்தித்தாள் படிக்க வேண்டும்.

பொருளாதாரம் குறித்த செய்திகளை படிக்க வேண்டும். இந்த வயதில் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் வளர வேண்டும். அதை பொறுமையாக படிக்க வேண்டும். செய்தித்தாள், புத்தகங்களை படித்தால் பெரிய அளவில் சாதிக்கலாம். 'தினமலர்-பட்டம்' இதழ் மூலம் பொது அறிவை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement