கள்ளக்குறிச்சியில் அரசு பஸ்களுக்கு தகுதி சான்று பிரிவு அமைக்கப்படுமா?'டீசல்' வீண் விரயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் அரசு பஸ்களை புதுப்பிப்பதற்கான போக்குவரத்து கழக தகுதி சான்று பிரிவு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, வெள்ளிமலை மற்றும் கள்ளக்குறிச்சி என மொத்தம் 7 இடங்களில் அரசு டெப்போக்கள் இயங்கி வருகிறது. அனைத்து டெப்போக்களில் இருந்தும் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வகையில் 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பழைய பஸ்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறையும், புதிய பஸ்கள் அனைத்தும் இரு வருடத்திற்கு ஒரு முறையும் புதுப்பித்து, தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்கான தகுதி சான்று பிரிவு உளுந்துார்பேட்டையில் இயங்கி வருகிறது.
பஸ்சில் ஏற்படும் சிறிய பழுதுகளை அந்தந்த டெப்போக்களிலேயே சரிசெய்து விடலாம். ஆனால், பெரிய அளவிலான பழுது மற்றும் புதிதாக பெயிண்ட் அடிக்க வேண்டுமெனில் உளுந்துார்பேட்டையில் உள்ள தகுதி சான்று பிரிவுக்கு ஓட்டி செல்ல வேண்டும். அங்கு பழுதுநீக்கம் செய்த பிறகு, வெள்ளையூரில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பஸ்கள் ஓட்டி செல்லப்படும்.
அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்சினை இயக்கி பரிசோதனை செய்து, தகுதிச்சான்று வழங்குவார். தொடர்ந்து, பஸ்கள் அனைத்தும் அந்தந்த டெப்போக்களுக்கு ஓட்டி செல்லப்படும்.இதில், சின்னசேலம் டெப்போ கட்டுப்பாட்டில் உள்ள அரசு பஸ்கள் உளுந்துார்பேட்டைக்கு சென்று, வர 126 கி.மீ., துாரம் ஓட்டி செல்ல வேண்டும். அதேபோல், சங்கராபுரம் டெப்போ பஸ்கள் 132 கி.மீ., துாரமும், கள்ளக்குறிச்சி டெப்போ பஸ்கள் 96 கி.மீ., துாரமும் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. ஒரு லிட்டர் டீசலுக்கு 5 - 6 கி.மீ., மட்டுமே 'மைலேஜ்' தரும் நிலையில், பஸ்களை புதுப்பிக்க நீண்ட துாரம் ஓட்டி செல்வதால் டீசல் வீண் விரயமாகி போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் டோல்கேட் இருப்பதால் பஸ்சுக்கு சுங்க கட்டணமும் செலுத்த வேண்டும். ஒரு சில பஸ்கள் சுங்க கட்டணத்தை தவிர்ப்பதற்காக கிராமங்கள் வழியாக இயக்கப்படுகிறது.
இதை தவிர்க்க, மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் வாகன தகுதி சான்று பிரிவு அமைக்க வேண்டும். இதன் மூலம் டீசல் செலவு குறைவதுடன், சுங்க கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், புதுப்பிக்கப்பட்ட அரசு பஸ்களை கள்ளக்குறிச்சியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலேயே சோதனைக்கு உட்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நஷ்ட செலவு குறையும். எனவே, போக்குவரத்து கழக அலுவலர்கள் இது தொடர்பான தகவலை துறை அமைச்சரிடம் தெரிவித்து, கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்து கழக தகுதி சான்று பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு