சிலிமே நீர் மின் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்; மீட்பு பணியில் இந்தியாவுடன் இணைந்தது அமெரிக்கா
காத்மாண்டு: நேபாளத்தின் சிலிமே நீர் மின்சார சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக்குழுவினருடன், அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினரும் இணைந்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர். ரசுவாவில் மீட்கப்பட்ட 45 உடல்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உடல்கள் மீட்கப்பட்டு, இதுவரை 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தில் சிலிமே மற்றும லாங்டாங் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்மின்நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்மின் நிலையத்தில் உள்ள சுரங்கங்கள், வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட மண் நிரம்பியுள்ளன. இதில், சுமார் 600க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களை மீட்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். வெடிபொருட்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் காற்று செலுத்தும் கருவிகளை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சுரங்கங்களில் மூடியுள்ள மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிலிமே நீர் மின்நிலைய சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக்குழுவினர் அமெரிக்காவைச் சேர்ந்த 'கிரைசிஸ் ரெஸ்பான்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் 13 பேர் கொண்ட குழு இணைந்துள்ளது.
சுரங்கங்களுக்குள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடியவர்களைக் கண்டறிய உயர் தொழில்நுட்ப கேட்புக் கருவிகளைப் பயன்படுத்தவும், சிறப்பு பாதுகாப்பு குழுக்களை ஈடுபடுத்தவும் இந்த மீட்புக் குழு திட்டமிட்டுள்ளது.
நேபாள வெள்ள பாதிப்பில் இந்திய மீட்புக் குழுக்களின் பணிகள் சிறப்பாக உள்ளதாக அமெரிக்க குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.