வெங்கட்டா நகர் பூங்கா 'டோட்டல் டேமேஜ்' :சீரமைக்குமா உழவர்கரை நகராட்சி 

புதுச்சேரி: புதுச்சேரி வெங்கட்டா நகர் பூங்காவிற்குள் நுழைந்தாலே, குட்டீஸ்களின் குதுாகலச் சிரிப்பொலிதான் காற்றில் மிதந்து வரும். அந்த மகிழ்ச்சிக்கு 100 சதவீதம் கியாரண்டி கொடுக்கும் ஒரே இடம் என்றால், அது பூங்காவில் இருக்கும் அந்த வண்ணமயமான 'சறுக்கு வீடு'தான்..

இரும்பு படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து ஏறி, உச்சி கோபுரத்தில் நின்று கொண்டு ஒட்டுமொத்தப் பூங்காவையும் வேடிக்கை பார்ப்பதே ஒரு தனி அலாதி. அப்புறம் அங்கிருந்து காற்று முகத்தில் அடிக்க சறுக்கிக்கொண்டு கீழே வருவதும், தோழிகளுடனும் தோழர்களுடனும் போட்டிபோட்டு ஓடுவதும் என அந்த இடமே சுட்டீஸ்களின் குட்டிச் சாகச உலகம்..

ஆனால், அதே சறுக்கு வீட்டின் இன்றைய நிலைமையைச் சென்று பார்த்தால்... அய்யய்யோ என்று நெஞ்செல்லாம் பதறுகிறது. ஆரம்பமே அதிர்ச்சி தான். சறுக்கு வீட்டிற்கு ஏறிச்செல்ல வேண்டிய இரும்புப் படிக்கட்டுகளையே காணவில்லை. சரி, எப்படியாவது கஷ்டப்பட்டு மேல ஏறிடலாம்னு ஏறிட்டா... அங்க காத்துக்கிட்டு இருக்கு அடுத்த ஆபத்து ட்விஸ்ட்..

மேலே இருக்கிற பைபர் நடைபாதையின் நட்-போல்ட்டெல்லாம் கழன்று போய், அப்படியே ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. எப்ப விழுவேன்... யாரை விழ வைப்பேன்னு மிரட்டலாக நிற்கிறது அந்தப் பகுதி.

சரி, மேலே வந்தாச்சு... சறுக்கிக்கொண்டாவது கீழே போயிடலாம்னு நினைச்சு சறுக்கினா அவ்வளவுதான். சறுக்குப்பாதையின் அடிப்பகுதி உடைந்தும் கூர்மையாகவும் கிழிந்து கிடக்கிறது. இறங்கி வர்ற சுட்டீஸ்களுக்குப் பரிசா கிடைக்கப் போவது மகிழ்ச்சி இல்லை... கை, கால்களில் ரத்தம் சொட்டச் சொட்ட ஆஸ்பத்திரிக்கு ஓடும் நிலைமை தான்.

அப்பாடா... சறுக்கவே வேண்டாம் சாமி, வந்த வழியிலேயே இறங்கி ஓடிடலாம் அப்படின்னு பார்த்தா, அங்கதான் அநியாய ட்விஸ்ட். இறங்கிப் போக வேண்டிய இன்னொரு பக்கத்துப் படிக்கட்டும் சுத்தமாக இல்லை. உயரமான இடத்தில் இருந்து குதித்துத் தப்பிப்பதை தவிர வேறு வழியே இல்லை. அதற்கு மேலே இருக்கும் மேற்கூரையும் டோட்டல் டேமேஜ்..

குழந்தைகளின் செல்லக் கனவுப் பிரதேசமாக இருந்த வெங்கட்டா நகர் பூங்காவின் சறுக்கு வீடு, இப்போது சுட்டீஸ்களை அச்சுறுத்தும் ஆபத்து வீடாக மாறியுள்ளது. உழவர்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பூங்கா பராமரிப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்தச் சறுக்கு வீட்டைச் சீரமைக்க வேண்டும்.

மீண்டும் இரும்பு படிக்கட்டுகளும், பாதுகாப்பான சறுக்குப் பாதைகளும் அமைத்து குட்டீஸ்களின் முகத்தில் புன்னகை மீண்டும் பூத்துக் குலுங்க செய்ய வேண்டும்.

Advertisement