மகப்பேறு விடுப்பால் ஏற்படும் காலிபணியிடங்களை அரசு எவ்வாறு சமாளிக்கிறது; கேட்கிறது உயர்நீதிமன்றம்
மதுரை: 'தகுதியுள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது முறையாக மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது பாராட்டத்தக்கது. மகப்பேறு விடுப்பால் ஏற்படும் காலிப்பணியிடங்களால் எழும் தேவைகளை சமாளிக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியை ஒருவர், ''எனக்கு முழு சம்பளத்துடன் ஓராண்டிற்கு மகப்பேறு விடுப்பு வழங்க வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்,'' என மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சர்வாகன் பிரபு ஆஜரானார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ''தகுதியுள்ள அனைத்து பெண் அரசு ஊழியர்களுக்கும் மூன்றாவது மகப்பேறு விடுப்பு வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது,'' என்றார்.
நீதிபதி: அரசின் முடிவை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. இது பெண்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு எடுத்துள்ள வரவேற்கத்தக்க முயற்சி. அதே வேளையில் மகப்பேறு விடுப்பால் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறை, காலிப்பணியிடங்களை அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பது குறித்து, கொள்கை முடிவு எடுப்பதற்கு முன் ஏதேனும் ஆய்வு நடத்தப்பட்டதா என்பதில் இந்நீதிமன்றம் அரசிடமிருந்து அறிக்கையை எதிர்பார்க்கிறது.
உதாரணமாக உயர்நீதிமன்றக் கிளை அமர்வில் நீதிபதிகளின் தனி உதவியாளர்கள் பிரிவில் மட்டும், அனுமதிக்கப்பட்ட அல்லது பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளனர். பிற துறைகளில் உள்ள நிலைமை குறித்து இந்நீதிமன்றத்திற்கு தெரியாது. ஏற்கனவே ஒவ்வொரு துறையிலும் வழக்கமான காலிப்பணியிடங்கள் உள்ளன; குறைந்த பணியாளர் எண்ணிக்கையுடன் துறைகள் இயங்கி வருகின்றன.
மகப்பேறு விடுப்பு நீட்டிக்கப்படுவதால், ஒவ்வொரு அரசுத்துறையிலும் எத்தனை சதவீதம் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் இருப்பார்கள் என்பது தெரியவில்லை. துறைகளின் செயல்திறன் என்பது அங்குள்ள பணியாளர் எண்ணிக்கையை சார்ந்தே அமைகிறது. மகப்பேறு விடுப்பால் ஏற்படும் காலிப்பணியிடங்களால் எழும் தேவைகளை சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், நடத்திய ஆய்வுகள் குறித்த அறிக்கையை இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
ஒவ்வொரு துறையிலும் மகப்பேறு விடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் சதவீதம் குறித்த அறிக்கையும் தேவை. செப்.,18 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இவ்வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
அரசு ஊழியரான மகளிருக்கு மூன்றாவது பிறந்த குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு கொடுக்கவேண்டும் என்று உத்திரவு போட்டு விட்டு இந்த கேள்வி வேறா. இதனால் மக்கள் வரிப்பணம் பாழ் வேலை கெட்டுவிடும் என்பது நீதி அரசருக்கு தெரியாதா. மாதம் 50000 சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த சலுகை தேவையா. வேலை இல்லாத பெண்களுக்கும் ஒரு வருடத்துக்கு செலவுக்கு பணம் கொடுக்க சொல்லி உத்திரவு போடுவீர்களா . சட்டத்தின் முன் அனைவரம் சமம் அல்லவா