புதுச்சேரிக்கு நித்யானந்தா வருவதாக முதல்வரிடம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு நித்யானந்தா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி அடுத்த ஏம்பலத்தில் கைலாசா நித்யானந்தா தியான பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தியான பீடத்திற்கு குடமுழக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கைலாச நாட்டில் இருந்து வந்த நிர்வாகிகள் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து பேசினர். அப்போது கைலாச நிர்வாகிகள், தியான பீடத்திற்கு விரைவில் குடமுழக்குசெய்ய முடிவு செய்துள்ளோம். இவ்விழாவில் நித்யானந்தா பங்கேற்க புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசிவருகிறோம். அவர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கைவைத்தனர்.

இதனை கேட்ட முதல்வர் ரங்கசாமி, சரி அவர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்ததோடு, கைலாச சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.   பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நித்யானந்தா தேடப்பட்டு வந்தார். கடந்த 2019 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ரகசியமாக வெளியேறினார். 2020ம் ஆண்டு கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார்.

தேடப்பட்டு வந்த நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாக அதனுடைய நிர்வாகிகள் அறிவித்து இருப்பதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement