மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியை முடிக்க நெடுஞ்சாலை துறைக்கு எம்.பி., அறிவுறுத்தல்

திருவள்ளூர், செப். 5–

மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்குமாறு, நெடுஞ்சாலை துறையினருக்கு, காங்., எம்.பி., சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தினார்.

மீஞ்சூர் – காட்டூர் நெடுஞ்சாலையில், 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, அங்குள்ள மக்கள் மீஞ்சூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

அவர்கள், மீஞ்சூர் – நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் கடவுப்பாதை எண்: 16ஐ கடந்து, பஜார் பகுதிக்கு வந்து செல்ல வேண்டும்.

ரயில்வே கடவுப்பாதை மூடியிருக்கும் நேரங்களில், நீண்ட நேரம் காத்திருந்து பரிதவிக்கின்றனர். மக்களின் காத்திருப்பு மற்றும் சிரமங்களை தவிர்க்க, 2019ல் மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதற்கான இணைப்பு சாலை பணி, கடந்த 2024 பிப்.,ல் தொடங்கப்பட்டது.

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 67.95 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இப்பணிகள், கடந்த ஆண்டு முடிந்து, மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.

கால அவகாசம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், பாலத்தின் இணைப்பு சாலைக்கான பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.

இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக நீடித்து வரும் இணைப்பு சாலை பணிகளால், ரயில்வே கேட் பகுதியில் மக்கள் காத்திருப்பதும் தொடர்கிறது.

இந்நிலையில், திருவள்ளூர் காங்., எம்.பி., சசிகாந்த் செந்தில், நேற்று முன்தினம் திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், ரயில்வே மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகளில் ஏற்பட்டு வரும் காலதாமதம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பின், ‘நவ., மாதத்திற்குள் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அங்கு அமர்ந்து, நான் போராட்டம் நடத்துவேன்’ என, அறிவுறுத்தினார்.

Advertisement