நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் புணரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தம் பக்தர்கள் வேதனை
சாத்துார், செப்.5-
ஏழாயிரம் பண்ணை நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் புணரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர் . பணிகளை முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் விரும்புகின்றனர்.
செவல்பட்டி ஜமின் நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் ,அன்னபூரணி தாயார் கோயிலை 2 ஆண்டுகளுக்கு முன்ப புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது.
கோயிலில் சுவாமி ,அம்பாள் கருவறை மீது உள்ள கோபுரங்கள் மட்டும் சீரமைக்கப்பட்டு வந்த நிலையில் கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், சுவர்கள், துாண்கள் ,மண்டபங்கள் ,சீரமைக்கப்படவில்லை.
இந்தக் கோயிலில் சுற்றிலும் பழங்காலத்தில் கட்டப்பட்ட தங்கும் மண்டபங்கள் உள்ளன.இந்த மண்டபங்கள் தற்போது கற்கள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தற்போது ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோயிலை நிர்வகித்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு சிவகாசி, சாத்துார், ஏழாயிரம் பண்ணை , சுற்றுக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திங்கள் , பிரதோஷ நாட்களுக்கு வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கோயிலில் நடந்து வந்த சிலைகள் சீரமைப்பு, மண்டபங்கள் புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதும் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது.
இந்தக் கோயிலோடு புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்ட சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில்,கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் பணிகள் முடிந்து கும்பாபிஷேகமும் நடந்து விட்ட நிலையில் ,நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலில் மட்டும் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. கடந்த சில வாரங்களாக பணிகள் ஏதும் நடைபெறாத நிலையால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.