மானாமதுரையில் பகலில் எரியும் தெருவிளக்கு
மானாமதுரை, செப்.6– -
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக
பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்திலும்
தெருவிளக்குகள் எரிந்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார
கிராமப்பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில்
தெருவிளக்குகள் இரவு நேரத்தில்
மட்டுமின்றி, காலை மற்றும் பகல் நேரங்களிலும் தொடர்ந்து எரிந்து வருகின்றன. குறிப்பாக முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் பகல் நேரத்திலும்
விளக்குகள் அணைக்கப்படாமல் இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மானாமதுரையில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டும், அறிவிக்கப்படாமலும் மின்வெட்ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மின்சாரம் சேமிக்க வேண்டிய சூழலில்
பகல் நேரத்திலும் தெருவிளக்குகள் எரிவது மின்சாரத்தை தேவையின்றி வீணடிக்கும் நிலையை
ஏற்படுத்தியுள்ளது. தெருவிளக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே இயக்கி, அணைக்கும் வகையில் தானியங்கி கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் ஏற்படும் பழுதுகளை அவ்வப்போது ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்.