வாலிபரை கொல்ல முயன்றவர்களை கைது செய்யாதது ஏன்? போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே வாலிபரை கொல்ல முயன்ற கஞ்சா கும்பலை கைது செய்யாததால், பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டா மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகன் மகன் ஜனா (எ) முத்தரசு 23; இவரது தம்பி முகிலன் 20;

இந்த இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் ஜனா (எ) முத்தரசு மீது கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில்கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த, 2ம் தேதி இரவு 10;00 மணிக்கு மிட்டா மண்டகப்பட்டு மந்தைவெளி திடலில் ஜனா (எ) முத்தரசு கஞ்சா போதையில் கூட்டாளிகளுடன் மது அருந்தினார்.

அப்போது அவ்வழியே சென்ற அதே வீதியை சேர்ந்த பலராமன் மகன் முகேஷ் 23;  பாக்கெட்டில் இருந்த ரூ. 700 பணம் மற்றும் மொபைல் போனை முத்தரசு பறித்தார். பணம் மற்றும் மொபைல் போனுக்கு பதிலாக, கஞ்சா பொட்டலங்கள் வாங்கிக்கொள்ளும்படி அவரிடம், முத்தரசு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்து முகேஷ் தனது பணம் மற்றும் மொபைல் போனை கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்தரசு பீர் பாட்டிலை உடைத்து முகேஷ் தலையில் பலமாக தாக்கினார். இதில் அவர் மண்டை உடைந்தது.

தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி சென்று, முகேசை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில், முத்தரசு அவரது தம்பி முகிலன் கூட்டாளியான ஆலமரத்து குப்பத்தை சேர்ந்த புவனேஷ் ஆகியோர் நள்ளிரவு 1;00 மணிக்கு முகேஷ் வீட்டிற்கு சென்று அவரது தாயார் மற்றும் சகோதரிகளை தரக்குறைவாக பேசி தகராறு செய்தனர்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த முகேசை, முத்தரசு மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றார்.

இதில் படுகாயம் அடைந்த முகேஷ் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். மேலும், அவருக்கு குடல் சரிந்தது. அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி கோரிமேடு ஜப்மர் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முகேசின் தாயார் கனகராணி கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 3 தினங்கள் கடந்தும் முகேஷை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து மிட்டா மண்டகப்பட்டு கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் நேற்று காலை 10;00 மணிக்கு கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement