மாநகருக்குள் ஒரு சுற்றுலா கனவு 

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல மலைகளுக்கு நடுவே திருப்பூர், ஆண்டிபாளையம் குளம் இல்லை. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பும் முக்கிய நெடுஞ்சாலையோரமும் இல்லை.



பின்னலாடை நகரமான திருப்பூரின் நகர்ப்புறத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த நீர்நிலை, இப்போது உள்ளூர் மக்களின் வார இறுதி சுற்றுலா தலமாக மாறி வருகிறது.



திருப்பூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் அமைதியான சூழலில் இருக்கும் ஆண்டிபாளையம் குளம், வார இறுதி நாட்களில் குடும்பங்களின் வருகையால் களைகட்டும்.



மோட்டார் படகு, துடுப்புப் படகு, மிதி படகு என பல்வேறு படகு சேவைகள் இங்கு இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பிற மாவட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அளவுக்கு இப்பகுதி இன்னும் முழுமையாக வளரவில்லை.



அந்த நிலையை மாற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இறங்கியுள்ளன.



---



புதிய சுற்றுலா முகம்



மாவட்ட கலெக்டர் தலைமையிலான சுற்றுலா மேம்பாட்டுக் குழு, ஆண்டிபாளையம் குளத்தை பொது–-தனியார் பங்களிப்பு முறையில் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது.



தனியார் பங்களிப்புடன் புதிய பொழுதுபோக்கு விளையாட்டு தளங்கள், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் படகு சேவைகள், தரமான உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது.



தற்போது உள்ளூர் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் படகு குழாமை, எதிர்காலத்தில் பிற மாவட்ட மக்களையும் ஈர்க்கும் சுற்றுலா தலமாக மாற்றுவதே திட்டத்தின் நோக்கம்.



---



கரையேறிய ஹவுஸ்போட்



கோவை வாலாங்குளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கேரள பாணி ‘ஹவுஸ்போட்’, தற்போது ஆண்டிபாளையம் குளத்தில் காட்சிப் பொருளாக நிற்கிறது.



இயக்கப்படாமல் இருக்கும் இந்த மிதக்கும் படகை புதுப்பித்து, ‘மிதக்கும் உணவகம்’ அல்லது பார்வையாளர்களுக்கான சிறப்பு தளமாக மாற்றும் திட்டமும் சுற்றுலாத்துறை வசம் உள்ளது.



சரியான வசதிகளும், புதிய பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்தால், பின்னலாடை நகரின் மத்தியில் இருக்கும் ஆண்டிபாளையம் குளம், திருப்பூரின் புதிய சுற்றுலா அடையாளமாக மாறும் வாய்ப்பு உள்ளது.



---–––



ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி நடக்கிறது.



கோவை வாலாங்குளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கேரள பாணி ‘ஹவுஸ்போட்’, தற்போது ஆண்டிபாளையம் குளத்தில் காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது.

Advertisement