விதிமீறிய கடைகளால் விவசாயிகள் போராட்டம்
உடுமலை: உடுமலை உழவர் சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி, இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது.
உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற பகுதியிலிருந்து விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளால், உழவர் சந்தை ரோட்டில், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இரு நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல், உழவர் சந்தை நுழைவாயில் மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து, ஏராளமான காய்கறி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனால், அதிருப்தியடைந்த உழவர் சந்தை விவசாயிகள், திடீர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சமரச பேச்சு நடத்தி, கடைகளை அப்புறப்படுத்தினர்.
நேற்று முன்தினமும், உழவர் சந்தைக்கு வெளியில், 500 மீட்டர் சுற்றளவில் கடைகள் அமைக்ககூடாது. உழவர் சந்தை செயல்படும் நேரத்தில், காய்கறி கடைகள் அமைக்க கூடாது என்ற விதிமுறைகளை மீறி கடைகள் அமைக்கப்பட்டன. உழவர் சந்தை விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நகராட்சி அதிகாரிகள், போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.