ரோட்டை மறைக்கும் முட்புதர்: வாகன விபத்துகள் அதிகரிப்பு
உடுமலை: உடுமலை, மூணாறு ரோட்டில், புங்கன் ஓடை பாலம் மற்றும் ரோட்டை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளால் விபத்துகள் ஏற்படுகிறது.
உடுமலை, மூணாறு ரோட்டில், புங்கன் ஓடை பாலம் உள்ளது. எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு 'எஸ்' வளைவுடன் விபத்து பகுதியாக உள்ளது. இப்பகுதியில், பாலத்தின் இரு புறமும் வளர்ந்துள்ள முட் புதர், கொடிகள் ரோட்டை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன.
வளைவு பகுதியில், ரோட்டை மறைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த முட்புதரால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதோடு, ரோட்டில் வரும் சுற்றுலா பயணியரும், விதிமீறி பாலத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, மலைகளை ரசிக்கின்றனர்.
செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள நிலையில், வாகனங்கள் நிறுத்தியிருப்பது தெரியாமல், வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. மேலும், ஒதுங்க முடியாத அளவுக்கு ரோடு குறுகலாக உள்ளதால், வாகனங்களில் செல்பவர்களும் முட்புதர் உரசி காயமடைகின்றனர். எனவே, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள, செடி, கொடி உள்ளிட்ட புதரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.