புதுமையான கைவினை தேயிலை வகைகள் தயாரிப்பு: சிறு விவசாயி அசத்தல்
ஊட்டி:ஊட்டியில் சிறு விவசாயிகளுடன், கே.எஸ்.சி., அறக்கட்டளை இணைந்து தேநீர் சுவையறிதல் நிகழ்ச்சி நடத்தியது.
பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலைத் தகவல்கள், மண் வளம், சந்தை விலைகள் மற்றும் சந்தையின் புதிய போக்குகள் குறித்த தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து, கே.எஸ்.சி., அறக்கட்டளை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த தேநீர் சுவையறிதல் நிகழ்ச்சியில் தேயிலை குறித்து கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள், தேநீர் பிரியர்கள், வர்த்தகர்கள் மற்றும் கைவினை முறையில் தேயிலை தயாரிக்கும் சிறு தேயிலை விவசாயிகள் பங்கேற்றனர். நீலகிரி தேயிலையின் தனித்துவமான பண்புகளை சுவைத்து அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
புதுமையான தயாரிப்பு
சிறு தேயிலை விவசாயிகளான பிரபு நஞ்சன், பரத் மற்றும் சிங்கம் சாது ஆகியோர் தயாரித்த கைவினைத் தேயிலைகள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு, சுவையறிதலுக்காக வழங்கப்பட்டன. பச்சைத் தேயிலை, கருப்புத் தேயிலை, வெள்ளைத் தேயிலை, சில்வர் டிப்ஸ், மஞ்சள் தேயிலை உள்ளிட்ட பல்வேறு வகைகளுடன், மணமூட்டப்பட்ட தேயிலைகளும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறு விவசாயி பரத் தயாரித்த புதுமையான கைவினைத் தேயிலை வகைகள் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தன. இதில், தேயிலை விவசாயிகளுக்கு பால் மற்றும் சக்கரை இல்லாமல் தேநீர் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது .சிறு தேயிலை விவசாயிகளிடையே புதுமையான தயாரிப்புகளுக்கும், மதிப்புக் கூட்டலுக்கும் உள்ள வாய்ப்புகளை இவை எடுத்துக்காட்டின.
புதுமை, மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தை குறித்த விழிப்புணர்வு ஆகியவை சிறு தேயிலை விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சிறப்பு ரக தேயிலை சந்தையில் நீலகிரி தேயிலைக்கான தனித்துவமான அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் என கே.எஸ்.சி., அறக்கட்டளை தெரிவித்துள்ளது.