காதொலி கருவியை மாட்டினால் ‘கொய்ங்க்’

திருப்பூர், செப்.7–

ஒலியை கேட்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் காதொலி கருவியை பெற்றுச் சென்ற காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு, தற்போது அதிக இரைச்சலே பெரும் தலைவலியாக மாறியுள்ளது.



திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, சமீபத்தில் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் வழங்கப்பட்டன. ஆனால், கருவியை பயன்படுத்திய பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியதாக புகார் எழுந்துள்ளது.



கருவியை ‘ஆன்’ செய்தவுடன் சுற்றுப்புற சத்தங்கள் அதிகமாக கேட்கின்றன. அருகில் இருப்பவர்கள் பேசுவது மட்டும் தெளிவாக கேட்பதில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.



காது கேளாத பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் கூறியதாவது:



‘‘மூன்று ஆண்டுகளாக காது கேட்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் காதொலி கருவி வழங்கப்பட்டது. ஆனால், பயன்படுத்தும்போது தொடர்ந்து அதிக இரைச்சல் ஏற்படுகிறது.



அருகில் பைக் சென்றால்கூட பெரிய வாகனம் செல்வது போன்ற சத்தம் கேட்கிறது. மேஜையில் பொருளை மெதுவாக வைத்தால்கூட அதிக சத்தமாக உணரப்படுகிறது. ஆனால், மற்றவர்கள் பேசுவது மட்டும் தெளிவாக கேட்பதில்லை.



எனக்கு மட்டுமல்ல; சமீபத்தில் வழங்கப்பட்ட பெரும்பாலான கருவிகளிலும் இதே பிரச்னை உள்ளது. பயன்பாட்டுக்கு உதவாத கருவிகளை திரும்பப் பெற்றுக்கொண்டு, தரமான புதிய கருவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.



புகார் மனு



திருப்பூரில் வழங்கப்பட்ட தரமற்ற காதொலி கருவிகளை திரும்பப் பெற்று, தரமான புதிய கருவிகளை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கம் சார்பில், தமிழக முதல்வர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூடுதல் செயலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

––

Advertisement