கண்மாய்களோ, அழிவின் விளிம்பில் அதிகாரிகளோ மெத்தனத்தில்
பேரையூர்: பேரையூர் பகுதியில் ஓரளவு மழை பெய்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் மழை நீரை சேமிக்க முடியாமல் கண்மாய்கள் அழியும் நிலை ஏற்பட்டு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. தற்போது மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஓடைகளில் பாயும் தண்ணீரில், பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் அடித்து வரப்படுகின்றன. பேரையூர் தாலுகாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் பராமரிப்பின்றி சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
பல ஓடைகளை காணவில்லை. சில ஓடைகள் குறுகி விட்டன. ஓடைகள், கண்மாய்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் குப்பையைக் கொட்டி நீர்நிலைகளை அழிக்கும் செயலுக்கு பிள்ளையார் சுழி போட்டன. சில கண்மாய்களில் மதகுப்பகுதிகளில்செடிகள் முளைத்தும், கான்கிரீட் ஸ்லாப்புகள் உடைந்தும் நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது.
இதைக் கண்காணித்து சரி செய்ய வேண்டிய அதிகாரிகளோ கண்டும் காணாமலும் உள்ளனர். இதனால் கண்மாய்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கண்மாய்களில் நீர் தேக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கை தந்த கொடையான மழை நீரை அதிகாரிகளின் அலட்சியத்தால் முறையாக சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.