பல்கலையில் புதிய தொழில்முனைவோர் மையம் துவக்கம் 3 மணி நேரத்தில் ரூ.96,000 ஈட்டி அசத்திய மாணவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பினை ஊக்குவிக்கும் வகையில், பல்கலைக்கழக தொழில்முனைவோர் மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

மும்பை ஐ.ஐ.டி.,யின் தொழில் முனைவோர் மையம் நடத்தும் தேசிய தொழில்முனைவோர் சவால் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வெறும் வேலை தேடுபவர்களாக அல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும். 

3 மணி நேரம் தான்:

தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் இந்த ஸ்டார்ட்அப் கிளப், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து  தொடங்குவோம் வளர்வோம் என்ற கருப்பொருளில் 8 மணி நேர ஹேக்கத்தான் போட்டியை நடத்தின.

இதில் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 29 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த 6 முதன்மை வழிகாட்டிகள்  மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினர்.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தொழில்திட்ட யோசனைகளை உருவாக்கிய மாணவர்கள், உடனடியாக மென்பொருள், செயலிகள் மற்றும் இணையதளங்களை வடிவமைத்து சந்தைப்படுத்தினர். அதில் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகியதன் மூலம், 3 மணி நேரத்தில் ரூ.96,000 ஈட்டி நேரடிச் சந்தை அனுபவத்தைப் பெற்றனர்.

துணை வேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், ‘புதுச்சேரி பல்கலைக்கழகத்தை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோர் பரிசோதனைக்கூடமாக மாற்றுவதே இதன் நோக்கம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8 மணி நேர ஸ்டார்ட்அப் ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கிய தொழில்திட்டங்கள் வழியாக வெறும் 3 மணி நேரத்தில் ரூ. 96,000 வருவாய் ஈட்டியது பாராட்டுக்குரியது’ என்றார். நிகழ்ச்சியில் மைய ஆலோசகர் சாருமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement