வட்டிக்கடையில் கவரிங் நகை கொடுத்து ஏமாற்றியவர் கைது

பரங்கிப்பேட்டை: வட்டிக்கடையில் கவரிங் நகை கொடுத்து ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 44; இவர், அதே பகுதியில் வட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது, கடையில் கடந்த ஆக., 23ம் தேதி சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை 4 கிராம் மோதிரத்தை அடகு வைத்து, ரூ. 35 ஆயிரம் பணம் வாங்கி சென்றார்.

இதில், சந்தேகமடைந்த வினோத்குமார், அந்த நகையை, சோதித்து பார்த்ததில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று சுரேஷ்குமார், அதேபோல் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை 8 கிராம் மோதிரத்தை அடகு வைத்து ரூ. 70 ஆயிரம் பணம் கேட்டப்போது கையும், களவுமாக சிக்கிக்கொண்டார்.

இதுகுறித்து, வினோத்குமார் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை, 40; கைது செய்தனர்.

 

Advertisement