மான்செஸ்டர் சிட்டி வெற்றி
மான்செஸ்டர்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, கோவன்ட்ரி சிட்டி அணிகள் மோதின. எர்லிங் ஹாலண்ட் (26வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கணக்கில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி (9 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்டர் மயாமி 'டிரா'
மயாமி: அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. மயாமி நகரில் நடந்த லீக் போட்டியில், இன்டர் மயாமி, அட்லாண்டா யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது. இன்டர் மயாமி சார்பில் லுாயிஸ் சாரஸ், கேஸ்மிரோ தலா ஒரு கோல் அடித்தனர். மயாமி அணி கேப்டன் மெஸ்ஸி, 2 'அசிஸ்ட்' செய்தார். அட்லாண்டா அணிக்கு அல்மிரான், எம்போலோ தலா ஒரு கோல் அடித்தனர்.
கூடைப்பந்து: காலிறுதியில் பிரான்ஸ்
பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பிரான்ஸ், தென் கொரியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 95-69 (24-31, 19-6, 33-17, 19-17) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஹங்கேரியை வீழ்த்திய பிரான்ஸ் அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்திய வீராங்கனை மான்சி சிங் 16-21, 8-21 என சீனாவின் வென் ஜிங் ஜுவிடம் தோல்வியடைந்தார்.
* ஜப்பானில் நடக்கும் 'கான்டினென்டல்' வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 0-3 (20-25, 26-28, 18-25) என, ஈரானிடம் தோல்வியடைந்தது. ஏற்கனவே சீனாவிடம் வீழ்ந்த இந்திய அணி, தனது கடைசி போட்டியில் (செப். 8) நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
* கஜகஸ்தானில் நடந்த டபிள்யு.டி.டி., 'கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் பைனலில், இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், சுதிர்த்தா முகர்ஜி ஜோடி 0-3 (2-11, 5-11, 18-20) என, ஜப்பானின் மியு ஹிரானோ, மியூ கிஹாரா ஜோடியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.