எகிப்தில் டிவி பெண் தொகுப்பாளர் உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டன; நீதிமன்றம் தீர்ப்பு

கெய்ரோ: போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய டிவி பெண் தொகுப்பாளர் சாரா கலீபா உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய குழு அமைத்தது, உரிமம் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கெய்ரோ கிரிமினல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பெண் தொகுப்பாளர் சாரா கலீபா உள்பட 12 பேருக்கு சுமார் ரூ.9.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், 7 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குற்றவாளிகளிடமிருந்து 750 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான கலிபாவை சுமார் 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். டிவி தொகுப்பாளரான இவர், பியூட்டி கிளினிக்கையும் நடத்தி வருகிறார்.

Advertisement