அதிகாரிகள் பாராமுகம்: சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவது அதிகரிப்பு: கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்த உபயோகத்திற்குரிய கார்கள், சிறிய வேன்களை வாடகைக்கு விடுவது தொடர்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளதாக வாடகை வாகன டிரைவர்கள் வேதனை தெரிவித்தனர். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக வாடகை வாகனங்களை இயக்கக்கூடிய உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அரசுக்கு இன்சூரன்ஸ், எப்.சி., பெர்மிட் மற்றும் பசுமை வரி உள்ளிட்ட வரி இனங்களை செலுத்தி 'டி போர்டு' மூலம் வாகனங்களை இயக்குகின்றனர்.

இந்நிலையில் இன்சுரன்ஸ் மட்டுமே செலுத்தி சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளக்கூடிய கார்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேன் உள்ளிட்ட வாகனத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப் பகுதிக்கு செல்லக்கூடிய பொதுமக்களை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்துவதால் இதன் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களும் செலுத்த முடியாமல் பாதிப்புக்குள்ளாகிறது. பலஆட்டோ, டூவீலர்கள், கார் உள்ளிட்டவையில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கும் போக்கு தொடர்கிறது. இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ராமநாதபுரம், பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டும் காணாதது போல உள்ளதாக வாடகை வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரத்தில் சொந்தவாகனங்களை வாடகைக்கு விடும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிக்கினால் ரூ.25ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அனுமதி பத்திரம் இன்றி வாகனத்தை இயக்கதிற்காக முதலில் ரூ.2000 முதல் ரூ.5000, அடுத்தமுறை ரூ.10ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனையும் கிடைக்கும். விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது, வாகனஉரிமையாளர் சொந்தபணத்தை செலவழிக்க வேண்டிவரும் என்றனர்.

-----

Advertisement