இந்த வாரம் எப்படி இருக்கும்? சந்தையின் போக்கில் போக கற்றுக்கொள்ள வேண்டும்

நியுட்ரன்: வாக்கு பலிச்சா லஞ்ச் வாங்கித்தாரேன்னு போனவாரம் சொல்லீட்டு போனீங்க. வாக்கும் பலிக்கலை. கையையும் சுட்டுக்கிட்டேன்.

அப்பு: என்ன வாக்கு பலிக்கலை?

நியுட்ரன்: என்ன பலிச்சுது வாராந்திர ரீதியா 277 புள்ளிகள் இறங்கியிருக்கு.

டவுனு: வியாபாரம் பண்ணத்தெரியலேன்னு சொல்லுங்க.

நியுட்ரன்: இதெல்லாம் ஓவருங்க. இறங்குற சந்தையில எப்படீங்க வியாபாரம் பண்றது.

அப்பு: வாராந்திர ரீதியாத்தான் இறங்குச்சே தவிர அன்றாடம் வியாபாரத்திற்கான வாய்ப்புகள் எக்கச்சக்கமா இருந்துச்சு.

நியுட்ரன்: சந்தை நடக்கறப்ப எனக்கு ஒன்னும் பிடிபடலையே!

டவுனு: அன்றாடம் ஓப்பனிங்கிற்கும் குளோசிங்கிற்கும் இடையே இருக்கற வித்தியாசம் வாரத்துல நாலு நாளைக்கு பாசிட்டிவாத்தான் இருந்துச்சு. அதுலயும் ஒரு நாள் 124 புள்ளிகள் இருந்துச்சு. அன்றாடம் ஹை-லோ-வுக்கு நடுவே சராசரியா 143 புள்ளிகள் இருந்துச்சு. அன்றாடம் ஓப்பனிங்கிற்கும் ஹை-க்கும் நடுவே சராசரியா 51 புள்ளிகள் வித்தியாசம் இருந்துச்சு. இப்ப சொல்லுங்க நியுட்ரன் பிரச்சினை சந்தையிலயா அல்லது உங்ககிட்டயா?

நியுட்ரன்: நல்லா சொல்றீங்க டீட்டெய்லு. நாலு வாரமா வாராந்திர ரீதியா தொடர்ந்து நிப்டி இறங்கிகிட்டே இருக்குது. இதுல எனக்கு வியாபாரம் பண்ண தெரியலையாமுல்ல. சும்மா சமாளிக்காதீங்க.

அப்பு: சந்தையின் போக்கில போக நீங்க கத்துக்கணும் நியுட்ரன்.

நியுட்ரன்: லஞ்ச் வேணா நான் வாங்கித்தரேன். அதுக்காக எனக்கு வியாபாரம் பண்ணத்தெரியல. சந்தை இப்படி ஏறிச்சு அப்படி ஏறிச்சுன்னு சொல்லி சமாளிக்காதீங்க. இப்ப நான் சொல்றேன் கேட்டுக்குங்க. டெக்னிக்கலா நிப்டி வீக்காத்தான் இருந்துச்சு. வர்ற வாரத்திலேயும் வீக்காத்தான் இருக்கப்போகுது.

அப்பு: செய்திகள் பாசிட்டிவ்வா இருந்தாலுமேயா?

நியுட்ரன்:
டெக்னிக்கலா வீக்காத்தான் இருக்கு. செய்திகள் பாசிட்டிவ்வா இருந்தாலுமே அதுக்கேத்தா மாதிரி கொஞ்ச நேரமோ ஒன்னு ரெண்டு நாளோ ஏறலாம். வாராந்திர அளவுல ஏற்றம் காண்பது டவுட்டுதான்.

டவுனு: வர்ற வாரத்துல அன்னிய செலவாணி கையிருப்பு தவிர வேற ஒரு இந்திய பொருளாதார தரவும் இல்லை. ப்ரொட்யூசர்ஸ் ப்ரைஸ் இண்டெக்ஸ், வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, பழைய வீடுகள் விற்பனை நிலவரம், பணவீக்க விகிதம், மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமென்ட் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

நியுட்ரன்: நிப்டிக்கு 23,742/23,586/23,450 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24,098/24,299/24,435 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 23,943-தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.

அப்பு: கிட்டத்தட்ட உங்க கருத்துதான் என் கருத்தும். ஆனா ஒரே ஒரு மாற்றம். வாராந்திர ரீதியா கொஞ்சம் பாசிட்டிவா குளோசாக வாய்ப்பு இருக்கு. ஏன்னா கடந்த 52 வாரத்துல போர் ஆரம்பிச்சப்ப மட்டும்தான் தொடர்ந்து ஆறு வாரம் நிப்டி இறக்கத்தை சந்திச்சது. அதனால ஐந்தாவது வாரமா வாராந்திர ரீதியில இறங்க வாய்பில்லை.

நியுட்ரன்: எனக்கு நம்பிக்கையில்லை.

அப்பு: என்னோட வியூ கேட்டீங்க நான் சொன்னேன்.

டவுனு: நானும் அதைத்தான் நினைக்கிறேன். தொடர்ந்து ஐந்து வாரம் இறங்க வாய்ப்பு குறைவாத்தான் இருக்குது.

நியுட்ரன்: கணிப்பை சொல்லுங்கன்னா ஆசையை சொல்ற மாதிரி இருக்குது. உங்க ஆசை நிராசையாத்தான் போகும்.

அப்பு: என்னங்க நியுட்ரன் நிப்டி இறங்கியேயாகனுமுன்னு அவ்வளவு தீவிரமா சொல்றீங்க.

நியுட்ரன்: சராசரியா என்னைய மாதிரி பலபேர்தான் சந்தையில இருக்காங்க. அதனால அவங்க இந்த வாரம் ரொம்ப கவனமா செயல்படுவாங்க. அதை மனசுல வச்சுத்தான்.

அப்பு: அதெல்லாம் வேலைக்கு ஆகாது. இரண்டு நாள் ஏறிச்சுன்னா உங்க மனசே மாறிடும்.

நியுட்ரன்: பார்ப்போம். அடுத்த வாரம் லாங் வீக் எண்டு வேற. சனி, ஞாயிறு, திங்களுன்னு மூன்று நாள் விடுமுறை. அதனாலேயே ஏற்றம் வர்றதுக்கு வாய்ப்பு குறைவுன்னு நான் சொல்றேன்.

டவுனு: சரி. உங்க பாயிண்ட்டுக்கே வருவோம். எங்கே நிப்டிக்கு ஸ்ட்ராங்கான சப்போர்ட் கிடைக்கும்.

நியுட்ரன்: 23,600/-23,500 லெவல்ல கிடைக்க வாய்ப்பிருக்கு.

அப்பு: ஏற்றம் வந்தா எதுவரை போகுமுன்னு எதிர்பார்க்கறீங்க.

நியுட்ரன்: ஏற்றம் வராதுங்கிறேன். அப்புறம் என்ன அதுல எதிர்பார்ப்பு.

அப்பு: ரொம்ப விரக்தில இருக்கீங்க போல. வாங்க போய் ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாம்.

டவுனு: ஆமாம். நியுட்ரன் எதிர்பார்க்கிற மாதிரி நடந்தா அதை எதிர்கொள்ள நாம ரொம்ப தெம்பா இருக்கணும்.

நியுட்ரன்: சொல்றதை சொல்லீட்டேன். அப்புறம் உங்க பாடு. இப்போதைக்கு சாப்பிடப்போகலாம் என்று சொல்ல மூவரும் ரெஸ்ட்டாரென்ட்டை நோக்கி நடந்தனர்.

Advertisement