ஐ.நா.,வின் புதிய உலக வரைபட தீர்மானத்துக்கு  ஆதரவு ஏன்?: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விளக்கம்

புதுடில்லி: “ஐ.நா., உலக வரைபட தீர்மானத்துக்கு இந்தியா அளித்த ஆதரவு, துல்லிய பரப்பு கொண்ட வரைபட முறையை பயன்படுத்தும் கொள்கைக்கு மட்டுமே, இந்தியாவின் காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகள் சித்தரிக்கப்படும் முறையை மாற்றுவதற்கான ஒப்புதலாக இதை கருதக்கூடாது,” என, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

உலக நாடுகளின் நிலப்பரப்புகளை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில், சம பரப்பளவு கொண்ட வரைபட முறையை பயன்படுத்தும் தீர்மானத்தை ஐ.நா., சபை கடந்த 4ம் தேதி நிறைவேற்றியது. இதற்கு ஆதரவாக, 164 நாடுகள் ஓட்டளித்தன; அமெரிக்கா மட்டும் எதிராக ஓட்டளித்தது.

'உலக வரைபடத்தில் திருத்தம்: சமச்சீரான வரைபட பிரதிநிதித்துவம் மற்றும் குறிப்பாக ஆப்ரிக்காவுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்கு வித்தல்' என்ற தலைப்பில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும், 'மெர்கேட்டர்' வரைபட முறையில் ஆப்ரிக்க கண்டம் சிறியதாகவும், வட அமெரிக்கா, க்ரீன்லாந்து பிராந்தியங்கள் மிகப்பெரியதாகவும் இருக்கும். இந்த மாறுபாடுகளை குறைப்பதே புதிய வரைபடத்தின் நோக்கமாகும்.

இந்த தீர்மானம் சர்வதேச எல்லைகள், உலக நாடுகளின் சர்ச்சைக்குரிய பகுதிகள் அல்லது இடங்களின் பெயர்கள் தொடர்பான அரசியல் வரைபடத்தை கையாளவில்லை.

தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

சம பரப்பு கொண்ட வரைபட முறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கைக்கே இந்தியா ஆதரவு தெரிவித்தது.

குறிப்பிட்ட எந்த வரைபடத்தையோ, வரைபட முறையையோ அல்லது தேசிய எல்லைகள் சித்தரிக்கப்படும் விதத்தையோ இந்தியா ஆதரிக்கவில்லை.

இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளான ஜம்மு - காஷ் மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே சித்தரிக்கப்பட வேண்டும். தவறான அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சித்தரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான நிலைப்பாடு தெளிவானது, தொடர்ச்சியானது, மாற்ற முடியாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement