'பிர்லா' வருகையால் பாதிப்பு இருக்காது கேபிள் நிறுவன பங்குகளின் சரிவு தற்காலிகமே

ஆதித்யா பிர்லா குழுமம் தனது 'அல்ட்ராவோல்ட்' பிராண்டு வாயிலாக கேபிள் மற்றும் வயர் வணிகத்தில் களம் இறங்கியுள்ள செய்தி வெளியானதை தொடர்ந்து, பங்கு சந்தையில் முன்னணி கேபிள் நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளன.

இருப்பினும், இந்த தற்காலிக சரிவை கண்டு சிறு முதலீட்டாளர்கள் பயந்து பங்குகளை விற்கவோ அல்லது அவசரப்பட்டு கூடுதல் பங்குகளை வாங்கவோ தேவையில்லை என 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

பிர்லா குழுமம் பெயின்ட் துறையில் ஆதிக்கம் செலுத்தியதுபோல கேபிளிலும் ஆதிக்கம் செலுத்தும் என பயப்பட வேண்டாம். கேபிள் தொழில் குறைந்த லாப வரம்பு கொண்ட, எலக்ட்ரீஷியன்களின் பரிந்துரையை நம்பியுள்ள துறை. சிமென்ட் வினியோக நெட்வொர்க், பிர்லாவின் வயர் விற்பனைக்கு நேரடியாக உதவாது.

இந்த வணிகத்தில் 2வது இடம் என பிர்லா குழுமம் அறிவித்திருப்பது வீட்டு வயர்கள் உற்பத்தி திறனுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த கேபிள் சந்தையையும் இது பாதிக்காது.

இந்திய கேபிள் மற்றும் வயர் துறை ஆண்டுக்கு 12.50 சதவீத வேகத்தில் வளர்கிறது. உள்கட்டமைப்பு, மின்மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டேட்டா சென்டர் தேவைகளால் சந்தையின் அளவு பெரிதாகி கொண்டே செல்கிறது.

பிர்லாவின் வருகை, முறைசாரா மற்றும் தரம் குறைந்த வயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களின் சந்தை பங்கைத்தான் பாதிக்குமே தவிர, முன்னணி பிராண்டுகளின் வளர்ச்சியை பாதிக்காது.
Latest Tamil News

Tamil News



இத்துறையில் பிர்லா நுழைகிறது என கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரியில் செய்தி வந்தபோதும் பங்குகள் 15-20 வரை சரிந்தன. ஆனால் நிறுவனங்களின் வலுவான லாப வளர்ச்சியால் பங்குகள் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டன.
பங்குகளின் வீழ்ச்சி பிர்லாவின் அறிவிப்பால் ஏற்பட்ட தற்காலிக பயமே. நிறுவனங்களின் உண்மையான வியாபாரமும் ஆர்டர்களும் வலு வாகவே உள்ளன.

எனவே, பதற்றத்தில் பங்குகளை விற்க வேண்டாம்; அதேபோல, உடனடியாக வாங்கவும் தேவையில்லை. அடுத்த 2 காலாண்டுகளில் அல்ட்ராவோல்ட்டின் சந்தை நகர்வுகளை கவனித்து நிதானமாக முடிவெடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement