100 நாளில் 904 ரெய்டு, விதி மீறிய 322 ஹோட்டல் மூடல்; தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு துக்காராம்

9



-நமது சிறப்பு நிருபர்-

மும்பையில் உணவு பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பணி தொடங்கிய முதல் 100 நாட்களில், 904 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, விதி மீறிய 457 பேரை கைது செய்துள்ளார்; 322 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ரூ.34 கோடி மதிப்பிலான கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்துள்ளார். தமிழகத்துக்கும் துக்காராம் போன்ற ஒரு அதிகாரி தேவை என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருபவர் துக்காராம் முண்டே. இவர் இந்த பொறுப்பை கடந்த மே 25ம் தேதி ஏற்றுக்கொண்டார். இன்றுடன் (செப் 08) அவர் இந்த பொறுப்புக்கு வந்து 106 நாள் ஆகிறது. துக்காராம் அதிரடி நடவடிக்கையால், ஒரு காலத்தில் மும்பையில் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட உணவகங்களில், இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவரது செயல்பாட்டுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது. இதற்கு காரணம், ஐஏஎஸ் அதிகாரியாக தனது 21 ஆண்டுகால சேவையில் 25 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் நேர்மையுடனும் , கண்ணியத்துடன் பணியை எதற்கு அஞ்சாமல் துக்காராம் முண்டே மேற்கொண்டு வருவது தான்.

துக்காராம் முண்டேவின் 100 நாள் அதிரடி நடவடிக்கைகள் வருமாறு:

* ஆணையராகப் பொறுப்பேற்றதிலிருந்து, துக்காராம் முண்டே உணவு கலப்படத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய தீவிர நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறார்.

* இவர் பதவியேற்ற முதல் 100 நாட்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழுக்கள் மஹாராஷ்டிரா முழுவதும் 904 இடங்களில் ரெய்டுகள் நடத்தின.

* ரூ. 34.7 கோடி மதிப்பிலான கெட்டுப்போன உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் போலி பனீர், கலப்படம் செய்யப்பட்ட பால், சுகாதாரமற்ற சமையல் எண்ணெய் மற்றும் அபாயகரமான செயற்கை சாயங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

* விதிமுறைகளைப் பின்பற்றாத 322 உணவு நிறுவனங்கள் உடனடியாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்ட 457 பேர் கைது செய்யப்பட்டனர்.

* இந்த ஆய்வுகளில் பெரிய பிரபலமான உணவு நிறுவனங்கள் கூட தப்பிக்கவில்லை, பாகுபாடு இல்லாமல் சிறிய, பெரிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

* வெறும் சுவையை விட, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதே துக்காராம் முண்டேவின் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளன.

* முக்கியக் கொண்டாட்டங்களின்போது வழங்கப்படும் அன்னதானத்தில், தரம் குறைந்த உணவு வழங்கக்கூடாது என்பதற்காக பல்வேறு அதிடியான புதிய உத்தரவுகளையும் துக்காராம் பிறப்பித்துள்ளார்.

* அடிக்கடி பணியிட மாற்றங்களுக்கு வழிவகுத்த அரசியல் மற்றும் நிர்வாக அழுத்தங்கள் இருந்தபோதிலும், அவரது சமரசமற்ற அணுகுமுறை மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றுள்ளது.

தமிழகத்துக்கும் துக்காராம் போன்ற சமரசம் இல்லாத, நேர்மையான ஒரு உணவுப் பாதுகாப்பு அதிகாரி தேவை. அப்போது தான் கலப்பட அரக்கர்களிடம் இருந்து அனைவரையும் காப்பாற்ற முடியும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement