பஸ் டிரைவரை கத்தியால்குத்தியவர் தலைமறைவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சீத்தையை சேர்ந்தவர் ராமர் 50. ராமநாதபுரம் நகர பஸ் பணிமனையில் டிரைவராக உள்ளார். ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று அதிகாலை 12.30 மணிக்கு சென்ற பஸ் சத்திரக்குடி அருகே பழுதானது. அதை பழுது பார்ப்பதற்காக ராமர் நகர டவுன் பஸ்சில் இரு மெக்கானிக்குகளுடன் சென்றுள்ளார்.

அச்சுந்தன்வயல் சோதனைச் சாவடி அருகே சென்ற போது ஒருவர் குறுக்கே வந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக ராமர் பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறுக்கே வந்தவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமரை குத்தினார். காயமடைந்த ராமர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரித்ததில் இளமனுாரை சேர்ந்த அருண்குமார் 40, என்பவர் கத்தியால் குத்தியது தெரிய வந்தது. அவரை தேடி வருகின்றனர். –––

Advertisement