திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை முக்கியம்: தவெக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்



சென்னை; வெற்று விளம்பரங்களை விட, விளைவித்த நெற்பயிர்கள் முக்கியமானவை. திறந்த வெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அவசியம் என்பதை தவெக அரசு உணரவேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தொழுப்பேடு பகுதியின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் அடுக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும் தமிழகத்தில், விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்க வெறும் நூற்றுக்கணக்கான நெல் சேமிப்பு கிடங்குகளே இயங்கி வருகின்றன. அதிலும் பெரும்பாலானவை மேற்கூரையற்ற திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளாகவே உள்ளன.

அப்படியிருக்கையில், நவீன நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்துவதை விட்டுவிட்டு, ரூ. 10 கோடியில் வெறும் 43,500 விவசாயிகளுக்கு மட்டும் தார்பாய்கள் வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்தால், விளைவித்த பொருட்கள் எப்படி பாதுகாக்கப்படும்?

லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மத்தியில் வெறும் 43,500 விவசாயிகளுக்கு மட்டும் தார்பாய்கள் வழங்கினால், மீதமுள்ள விவசாயிகளின் மொத்த உழைப்பும் இப்படி மழையில் நனைந்து வீணாகி விடும் என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டாமா?

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரைத் திறப்பதை விளம்பரப்படுத்த ரூ. 5 கோடி வரை செலவிடுவதை விட, தமிழகத்தில் உள்ள திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அமைப்பதுதான் முக்கியம் என்பதை முதல்வர் ஏன் உணரவில்லை?

அடுத்த ஜென்மத்தில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என வசனம் பேசும் விஜய், தான் முதல்வராக இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement