கிரைம் கார்னர்: சென்னை
வாகனங்களை நொறுக்கிய நபருக்கு வலை
காசிமேடு: காசிமேடு, திருவள்ளுவர் நகருக்கு நேற்று அதிகாலை 2:00 மணியளவில், டூ - வீலரில் வந்த மர்ம நபர், பட்டாக்கத்தியால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு 'டாடா ஏஸ்' லோடு வாகனங்கள், மூன்று ஆட்டோக்கள், நான்கு 'டி.வி.எஸ்., ஜூபிடர்' ஸ்கூட்டர்கள், 'ஹோண்டா யூனிகார்ன்', பைக் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்.
பிளஸ் 1 மாணவி துாக்கிட்டு தற்கொலை
கொளத்துார்: கொளத்துார், கிழக்கு தெருவைச் சேர்ந்த 15 வயது பிளஸ் 1 மாணவி, மாதவரத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார். உடல்நிலை சரியில்லை எனக்கூறி, மாணவி நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. தாய் உள் அறையில் துாங்கிய நேரம் பார்த்து, வீட்டு ஹாலில் துாக்கிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கஞ்சா விற்ற நால்வர் பிடிபட்டனர்
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் உள்ள மைதானத்தில் நின்றிருந்த திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த சந்துரு, 24, பழைய வண்ணாரப்பேட்டை அப்துல் அமித், 30, தாஜிதீன், 20, கொடுங்கையூர் அமீர் உசேன், 19; ஆகியோரை, வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா, போதை வஸ்துவான 30 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பைக் திருடிய இருவர் கைது
சூளைமேடு: சூளைமேடு, சவுராஷ்டிரா நகர், 10வது தெருவைச் சேர்ந்தவர் விஜய்பிரியன், 25. வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த இவரது 'கே.டி.எம்., டியூக்' பைக், கடந்த 25ம் தேதி திருடுபோனது. சூளைமேடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆவடியைச் சேர்ந்த தமிழ்செல்வன், 20; பட்டாபிராம் பஷீர் பாஷா, 19 ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில், திருமங்கலத்தில் 'யமஹா ஆர்15' பைக்கையும், அவர்கள் திருடியது தெரிந்தது. இரண்டு பைக்குகளையும், போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
பல் மருத்துவமனையில் திருட்டு
மதுரவாயல்: மதுரவாயல், பல்லவன் நகரில் பல் கிளினிக் நடத்தி வருபவர் கமலக்கண்ணன், 40. நேற்று காலை நோயாளிகள் போல கிளினிக்கிற்கு வந்த மர்ம நபர்கள், 'ஏசி' இயந்திரத்தின் அவுட்டோர் யூனிட்டை கழற்றி, ஆட்டோவில் எடுத்து சென்றனர். ஊழியர்கள் சத்தம் போடவே, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இது குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணை சீண்டிய முதியவர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்த 19 வயது பெண், கணவர் மற்றும் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரவி, 64, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் நேற்று ஈடுபட்டார். எம்.கே.பி.நகர் போலீசார், நேற்று காலை, ரவியை கைது செய்தனர்.
ரூ.25 லட்சம் மோசடி: வாலிபர் கைது
அம்பத்துார்: அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் பொன்ராஜ் வைரமணி, 65, என்பவரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி, பல தவணையாக 25.60 லட்சம் ரூபாயை மர்ம நபர் பறித்தார்.
இதுகுறித்து விசாரித்த ஆவடி தனிப்படை போலீசார் விசாரித்து, தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் வெமுலா சிவசங்கர், 25, என்பவரை கைது செய்து, சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர். இவர், மோசடி நபருக்கு வங்கி கணக்கு கொடுத்து உதவியவர். இவரை தொடந்து, பிரதான குற்றவாளியை, போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் போலீஸ் வீட்டில் திருட்டு
திருநின்றவூர்: திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்த, ஆவடி மத்திய குற்றப்பிரிவு பெண் காவலரான ஜெபஷீலா, 43, வீட்டில், நேற்று முன்தினம் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 10,000 ரூபாய் திருடி சென்றனர். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது
அண்ணா சதுக்கம்: திருவல்லிக்கேணி, புதிய கட்டை தொட்டி தெருவைச் சேர்ந்தவர் தையல்நாயகி, 52. கடந்த, 4ல், வீட்டு படிக்கட்டில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், தையல்நாயகி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் செயினை பறித்து தப்பினார்.
அண்ணாசதுக்கம் போலீசார் விசாரித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டேவிட், 31, திண்டிவனத்தைச் சேர்ந்த லோகேஷ், 27, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். 8 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.