வரதர் கோவிலில் மொபைல் வைப்பு மையம் மூடல்: போன்களை ‛சுவிட்ச் ஆப்' செய்ய அறிவுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல தடை அமலுக்கு வந்த ஒரே வாரத்தில், மொபைல் போன்களை வைக்கும் வைப்பு மையம் நேற்று மூடப்பட்டு இருந்தது. இதனால், மொபைல் போன்களை ‛சுவிட்ச் ஆப்' செய்தபின் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய 52 கோவில்களுக்குள் பக்தர்கள் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல செப்., 1 முதல், ஹிந்து சமய அறநிலையத் துறை தடை விதித்தது. அதன்படி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்கள் கோவிலுக்கு மொபைல் போன் எடுத்துச் செல்ல கடந்த 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
பக்தர்களின் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, கோவில் நுழைவாயிலில் மொபைல் போன் வைப்பு மையம் அமைக்கப்பட்டது. இங்கு பக்தர்கள் தங்ளது மொபைல்போன்களை ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி, கொடுத்துவிட்டு உரிய ரசீது பெற்று சென்றனர். தரிசனம் முடிந்து திரும்பி வந்த பக்தர்களிடம், மொபைல்போன் திருப்பி தரப்பட்டது.
இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த மொபைல்போன் வைப்பு மையம் நேற்று மூடப்பட்டு இருந்தது. இதனால், பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை வைப்பு மையத்தில் கொடுக்காமல், கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர். இதனால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் பக்தர்கள் மொபைல் எடுத்து செல்ல அரசு விதித்த தடை உத்தரவு ஒரே வாரத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை, வைப்பு மையத்தில் கொடுத்துவிட்டு செல்வதற்கு எதிர்த்து தெரிவித்து வந்தனர்.
இதனால், மொபைல்போன் வைப்பு மையம் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை ‛சுவிட்ச் ஆப்' செய்தபின் கோவிலுக்குள் செல்லுமாறு கோவில் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.