புது வீட்டு கதவில் விரிசல்:  இழப்பீடு வழங்க உத்தரவு 

கோவை: வீட்டுக்கு ஆர்டர் கொடுத்த புதிய கதவில் விரிசல் ஏற்பட்டதால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

போத்தனுார், காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கிருஷ்ணராஜ். புதிய வீட்டுக்கு தேவையான தேக்கு மர கதவுகள் செய்ய சாய்பாபா காலனியிலுள்ள ஆர்ய பான்ஜி என்ற கடையில் 2025, மே 8ல் ஆர்டர் கொடுத்தார்.

3.45 லட்சம் ரூபாய் முன்தொகை செலுத்தினார். தயாராக இருந்த தேக்கு கதவுகளை எடுத்து வரச் சென்றார். அப்போது கதவுகளில் விரிசல் இருந்தது. மாற்றாக வேறு கதவு செய்து தருமாறு கேட்ட போது மறுத்து விட்டனர்.

இதனால் புதுமனை புகுவிழா நடத்த முடியாமல் காலதாமதம் ஆனது. பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்ததால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதில் அளிக்கப்படவில்லை.

இதனால் பணத்தை திருப்பி தரவும், இழப்பீடு கோரியும், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா பிறப்பித்த உத்தரவில், ' மனுதாரர் செலுத்திய முன்பணம் 3.45 லட்சம் ரூபாயை, எதிர் மனுதாரர் திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 75,000 ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement