பெத்தி செமினேர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் புனித ஆரோக்கிய அன்னையின் பெருவிழா
புதுச்சேரி: பெத்தி செமினேர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் புனித ஆரோக்கிய அன்னையின் பெருவிழா, அன்னையர் தினம் மற்றும் பெண் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
பள்ளியின் முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமையில் நடந்த விழாவிற்கு, புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் முன்னிலை வகித்தார். மறைமாவட்ட பொருளாளர் பிலோமின்தாஸ், போப் இரண்டாம் ஜான் பால் கல்வியியல் கல்லுாரி முதல்வர் ரிச்சர்டு, ரெட்டியார்பாளையம் பாதிரியார் ஜோசப் ஜான்பால் மற்றும் மறைமாவட்ட குருக்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
'பெண் குழந்தைகள் எங்கள் மகள்கள்' என்ற தலைப்பில் பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் பேசுகையில், 'ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் தாயின் அன்பும் தியாகமும் அழியாத சுவடாகவும், வாழ்வின் அடையாளமாகவும் திகழ்கிறது.
மாணவர்கள் தங்கள் அன்னையின் வழிகாட்டுதலை உணர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இன்றைய சூழலில் பெண் குழந்தைகள் அச்சமின்றி கல்வி கற்று, தன்னம்பிக்கையுடனும் நற்பண்புகளுடனும் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். பெண்களை மதித்துப் பாதுகாத்து, அவர்களின் கனவுகளுக்குத் துணை நிற்பதே ஒரு சிறந்த சமூகத்தின் அடையாளம்' என்றார்.
புனிதப் பண்டம் வரவேற்பு:
ஆன்மிக பக்தியுடனும் இறையருள் நிறைந்த சூழலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகப் பங்கேற்று புனித ஆரோக்கிய அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். விழாவின் சிறப்பு அம்சமாக, பிரான்சில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித குழந்தை தெரசாவின் புனிதப் பண்டம் பக்திப் பரவசத்துடன் வரவேற்கப்பட்டது. அனைவரும் புனிதப் பண்டத்தைத் தரிசித்து பிரார்த்தனை மேற்கொண்டனர்.
@block_B@ பாக்ஸ் ருசி ஐஸ்கீரிம் விழாவின் நிறைவாக, மாணவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் அனைவருக்கும் கேக் மற்றும் ருசி ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. அன்பு, நன்றியுணர்வு, மகிழ்ச்சி ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.block_B